பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விசிக - தவெக கூட்டணிப் பிரச்சனையின் அடுத்தகட்ட நகர்வாக பனையூர் பாபு விவகாரம் உருவெடுத்துள்ளது. கொள்கை முரண்பாடுகள் மற்றும் உள்கட்சிப் பூசல்களால் அதிருப்தியடைந்த முக்கியத் தலைவரான பனையூர் பாபு, தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த செய்திதான் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது.

    Advertisement

    "விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது" என்று முன்பு சூளுரைத்துவிட்டு, இன்று கொள்கைகளை மழுங்கடித்து அவர்களுடனேயே கைகோர்ப்பது முரண்பாட்டின் உச்சம் என்று பனையூர் பாபு விசிக தலைமை மீது கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

    Advertisement

    பனையூர் பாபு விலகல்

    மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது என்ற அம்பேத்கரின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டிய பனையூர் பாபு, அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்துடன் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் தம்மால் பயணிக்க இயலாது எனக்கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகுவதாக கனத்த இதயத்தோடு தெரிவித்திருந்தார்.

    கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் இந்த வேளையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பனையூர் பாபுவின் இந்த திடீர் விலகல் அறிக்கை, விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக - விசிக

    தவெக தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் விசிக இணைந்ததை கொள்கை ரீதியாக பாபு துளியும் விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் சீட் கிடைக்காத பெரும் ஏமாற்றமும், தொகுதிப் பங்கீட்டில் நடந்த உள்கட்சி பூசல்களும் முக்கியக் காரணமாக இருந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செய்யூர் சட்டமன்றத் தொகுதியைத் தனக்காகக் குறிவைத்து, களப்பணிகளை மேற்கொண்டு மிகத் தீவிரமாகத் தயார் செய்து வைத்திருந்தாராம் பனையூர் பாபு.

    திமுகவில் பனையூர் பாபுவுக்கு முக்கிய பதவி?

    ஆனால், விசிக தலைமை அவரிடம் எந்தவித முன்ஆலோசனையும் நடத்தாமல், செய்யூர் தொகுதியை திடீரென சிந்தனைச் செல்வனுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ளது. இதனால் பனையூர் பாபு கடும் அதிருப்தியடைந்து விசிக-விலிருந்து முற்றிலுமாக ஒதுங்கியிருந்தார்.

    Advertisement

    சீட் கிடைக்காத விரக்தி மற்றும் கட்சியில் தனக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டது போன்ற காரணங்களால் மனமுடைந்திருந்த பனையூர் பாபுவுக்கு, திமுக தரப்பிலிருந்து உடனடியாக அரசியல் அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை திமுக தலைமையுமே விரும்பாத சூழலில், விசிகவில் அப்செட்டாக இருக்கும் முக்கியத் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக வியூகம் வகுத்து செயல்பட்டது.

    அதனடிப்படையில பனையூர் பாபுவை திமுக தலைமை நேரடியாக அழைத்து தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.. தொடக்கத்தில் இந்த அழைப்புக்கு பெரிய அளவில் பிடிகொடுக்காமல் இருந்த பனையூர் பாபு, இப்போது திமுகவில் இணைய முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    7ம் தேதி இணைப்பு விழா

    இதற்கான மெகா இணைப்பு விழா வரும் ஜூன் 7ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அன்றைய தினம் பனையூர் பாபு தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்களுடன் திமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அப்படி பனையூர் பாபு இணையும் பட்சத்தில், அவருக்கு மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய 2 முக்கியத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என திமுக உள்கட்சி வட்டாரத்தில் பலமாக பேசப்பட்டு வருகிறது. திருமாவுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு திமுகவில் ஐக்கியமாகும் பனையூர் பாபுவின் இந்த அதிரடி நகர்வு, தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

    English Summary

    Panaiyur Babu’s Mass Political Move... Is That Constituency the Reason? A DMK Surprise Awaits on June 7, Leaving VCK Stunned