சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கார் வழங்கப்பட உள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த புதன்கிழமை அன்று சட்டசபையில் அறிவித்தார். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு எம்.எல்.ஏக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், ஊராட்சித் தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும், குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 16-வது நிதிக் குழு மானியத்துக்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டும், விபி ஜிராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபிறகு பேசிய விழுப்புரம் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர், "எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களை விட அதிகளவில் மக்கள் பணி செய்வது ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான். மக்களை நேரடியாக நாள்தோறும் சந்திப்பவர்கள் நாங்கள் தான். இரவு பகல் பாராமல், மழை வெயில் பாராமல், மக்களுக்காகப் பணியாற்றுபவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள். எத்தனையோ ஊராட்சி தலைவர்கள் இருசக்கர வாகனம் இல்லாமல் இருக்கிறார்கள். வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பேருந்துகளில் தான் வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம், மக்களுக்காக எந்நேரமும் உழைக்க சுற்றி வரும் எங்களுக்கு ஊராட்சி பணிகளை ஆய்வு செய்ய குறைந்தபட்சம் இருசக்கர வாகனமாவது வழங்க வேண்டும்." என வலியுறுத்தி உள்ளனர்.