70 கி.மீ தள்ளியே போச்சு.. லேட் ஆனா 100 கி.மீ தான்.. சென்னை பரந்தூர் ஏர்போர்ட் மேட்டரில் உடைந்த உண்மை

  • சென்னை: பரந்தூர் விமான நிலைய நில கையகப்படுத்தும் செயல்முறையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஆழ்ந்த கவலையுடன் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் முக்கிய கருத்துக்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத் திட்டம் என்பது வெறும் ஒரு கட்டுமானத் திட்டம் அல்ல; அது தமிழ்நாட்டின் அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பு திட்டமாகும்.

    Advertisement

    தற்போது சென்னை சர்வதேச விமான நிலையம் ஆண்டுதோறும் 2.2 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மிக விரைவில் அதன் முழு செயல்பாட்டு வரம்பையும் அது எட்டிவிடும் என்று விமானப் போக்குவரத்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் தங்களது விமான கட்டமைப்புகளை வேகமாக விரிவாக்கி வருகின்றன. குறிப்பாக பெங்களூர் ஏற்கனவே தனது 3வது விமான நிலையத்திற்கான திட்டமிடலை தொடங்கியுள்ளது. ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களும் உலகளாவிய தரத்தில் தங்களது விமான நிலையங்களை விரிவுபடுத்தி வருகின்றன.

    Advertisement

    சென்னை விமான நிலையம்

    ஆனால் ஒரு தசாப்தத்திற்கு முன்பு வளர்ச்சியில் 4வது இடத்தில் இருந்த சென்னை, இன்று புனே மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் 7வது இடத்திற்காக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது மிகுந்த வேதனையளிக்கும் உண்மையாகும்.

    தற்போதைய சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு மற்றும் விரிவாக்க திறன் குறைவாக இருப்பதால், பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள், சர்வதேச சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில்துறை ஏற்றுமதி வாய்ப்புகளில் தமிழ்நாடு பின்தங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இத்திட்டம் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுமானால், சென்னையின் வளர்ச்சி மேலும் 20 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படும். 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்பட்டிருந்தால், சென்னை நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய விமான நிலையத்தை அமைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால் திட்டமிடல் குறைபாடு மற்றும் காலதாமதம் காரணமாக இன்று 70 கிலோமீட்டர் தொலைவில் விமான நிலையத்தை அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பரந்தூர் விமான நிலையம்

    இனியும் காலதாமதம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் 100 கிலோமீட்டருக்கும் அப்பால் தான் புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராம மக்களின் அச்சம், விவசாயிகளின் வாழ்வாதார கவலை, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கேள்விகள் மற்றும் உள்ளூர் மக்களின் உணர்வுகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் தலைமுறை வாழ்வாதாரத்தை இழந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த அச்சங்களையும் வேதனைகளையும் அரசு மனிதநேயத்துடன் அணுக வேண்டும்.

    Advertisement

    விவசாயிகளின் உணர்வுகள்

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த காலத்தில் போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளின் உணர்வுகளை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. தற்போதைய 'Status Quo' உத்தரவும் அந்த மனிதநேய அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதார பாதுகாப்பும் இரண்டையும் சமநிலைப்படுத்தும் வரலாற்றுப் பொறுப்பு இன்று தமிழக அரசின் முன்னிலையில் உள்ளது.

    எனவே, இந்த திட்டத்தை முழுமையாக கைவிடுவது அல்ல; மாறாக மனிதநேயத்துடனும் நியாயமான மறுவாழ்வு திட்டங்களுடனும், வெளிப்படையான ஆலோசனைகளுடனும், மக்களின் ஒத்துழைப்பை பெற்று முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

    Advertisement

    அரசு மேற்கொள்ள வேண்டிய அவசர அடிப்படை

    * நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பை விட குறைந்தது மூன்று மடங்கு இழப்பீடு வழங்க வேண்டுகிறோம்.

    * பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மாற்று இடங்களில் இலவச வீட்டு மனை, குடியிருப்பு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டுகிறோம்.

    * நிலத்தை இழக்கும் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டுகிறோம்.

    * தேசிய வளர்ச்சிக்காக நிலம் வழங்கும் குடும்பங்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு உள்ளிட்ட சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுகிறோம்..

    * சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பராமரிப்பு மற்றும் விவசாய வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனித்துவமான மறுசீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுகிறோம்.

    * பொதுமக்களுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுகிறோம்.

    தமிழக அரசு - வளர்ச்சிப் பாதை

    இவ்வாறு அரசு மனிதநேயத்துடனும் நியாயமான இழப்பீட்டுடனும் அணுகும் பட்சத்தில், நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களும் தாமாக முன்வந்து ஒத்துழைப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் என்பது வெறும் ஒரு விமான நிலையம் குறித்த விவகாரம் அல்ல; அது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையின் பொருளாதார எதிர்காலம், வேலைவாய்ப்பு உருவாக்கம், உலகளாவிய முதலீட்டு திறன் மற்றும் சர்வதேச வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியையும், உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகளையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்தை உடனடியாக துரிதப்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென டாக்டர் ஆ.ஹென்றி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Parandur Airport 70 km away and might stretch to 100 km if delayed further warns FAIRA President updates