பரந்தூரில் விமான நிலையம் அமைய கூடாது.. வேறு இடம் பாருங்கள்.. அதிகாரிகளிடம் பிடிவாதம் காட்டிய விஜய்!

  • சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் பிடிவாதம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. என்னுடைய கள அரசியல் தொடங்கியதே அங்கிருந்து தான் என்று கூறி வரும் விஜய், சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க வேறு இடம் பாருங்கள் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.

    Advertisement

    சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

    Advertisement

    இந்த 5,746 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,774 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளது. இதனால் வருவாய்த் துறை தரப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டதாக வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. தவெகவை தொடங்கியது முதலே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விஜய் எதிர்த்து வருகிறார். விஜய்யின் கள அரசியல் தொடங்கியதும் பரந்தூரில் இருந்து தான். இதனால் பரந்தூரில் விமான நிலையம் அமையுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்தது.

    Advertisement

    ஆட்சிக்கு வந்தபின் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்திவிட்டார். ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசிடம் இதுவரை முதல்வர் விஜய் தரப்பு எந்த கடிதமும் எழுதவில்லை. இதனை நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு உறுதி செய்தது.

    இதனிடையே பரந்தூர், ஏகனாபுரம் மக்கள் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட விஜய்க்கு நன்றி தெரிவித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டனர். தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக விஜய் இறுதி முடிவை எடுத்துவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தன்னுடைய கள அரசியல் தொடங்கியதே அங்குதான்.. அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று விஜய் கேட்டதாக தெரிகிறது.

    Advertisement

    சென்னைக்கு 2வது விமான நிலையம் அவசியம் என்றும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால், ஏற்கனவே வந்த முதலீடுகள் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஏனென்றால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் தரப்பில் இதுதொடர்பாக முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை.. விமான நிலையம் அமைக்க வேறு இடத்தை பாருங்கள் என்று முதல்வர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் வரும் என்று நம்பி ரியல் ர்ஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

    English Summary

    Parandur Airport: CM Vijay Stays Firm on Relocation, Asks Officials for Alternatives for Chennai Second Airport