சென்னை: சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டமான 'பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம்' தற்போது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான மிக முக்கிய நிர்வாகப் போராட்டமாக மாறியுள்ளது. புதிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை (Status Quo) விதித்து, மாற்று இடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவை மாநில அரசுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
பரந்தூர் திட்டமானது ஏதோ ஒரு சில மாதங்களில் எடுக்கப்பட்ட முடிவல்ல. கடந்த 7 முதல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வான்வெளி ஆய்வுகள் (Airspace feasibility), மண் பரிசோதனைகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், DGCA போன்ற உயர்மட்ட அமைப்புகளின் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே இந்த இடம் இறுதி செய்யப்பட்டது. இதற்காக மத்திய, மாநில அரசு அமைப்புகள் தங்களின் பெரும் பொருளாதாரத்தையும், மனித உழைப்பையும் முதலீடு செய்துள்ளன. மத்திய அரசின் தீவிர முயற்சியால் கடந்த 2025 ஏப்ரலில் இத்திட்டத்திற்கான கொள்கை அளவிலான (In-principle approval) இறுதி அனுமதியும் வழங்கப்பட்டது. மேலும், முந்தைய ஆட்சியில் சுமார் 1,700 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, தற்போதைய நிலையில் டெண்டர் விடும் பணிகளுக்கான ஆயத்தங்கள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில், திட்டத்தை திடீரென மாற்று இடத்திற்கு மாற்ற முயல்வது சென்னை மற்றும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் என்று விமான போக்குவரத்து வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையம் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் அதன் உச்சகட்டப் பயணிகள் கையாளுதல் திறனை நெருங்கிவிட்டது. இதனால் புதிய சர்வதேச விமான நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்குகின்றன. பரந்தூர் கைவிடப்பட்டால், புதிய இடத்தைத் தேர்வு செய்து, மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து pre-feasibility மற்றும் தள ஆய்வுகளைத் தொடங்கக் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். இது ஒட்டுமொத்த உள்கட்டமைப்புப் பணிகளையும் 2030-களின் இறுதி வரை இழுத்தடித்துவிடும். மேலும், கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம், ஓசூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் நெய்வேலி போன்ற இதர பிராந்திய விமான நிலையத் திட்டங்களுக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) அனுமதியும், நிதிப் பங்களிப்பும் தமிழகத்திற்கு மிக முக்கியமாகும். பரந்தூர் போன்ற மெகா திட்டங்களில் மாநில அரசு முட்டுக்கட்டை போட்டால், மற்ற மாவட்டங்களின் விமான நிலையத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல்களும் தேக்கநிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தொழில் துறையினர் அஞ்சுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "நீர்நிலைகளையும், விவசாய நிலங்களையும் அழித்து விமான நிலையம் அமைக்க த.வெ.க அரசு அனுமதிக்காது. மாற்று இடங்களை மட்டுமே அரசு பரிசீலிக்கும்" என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஏகனாபுரம் மக்களின் 1000 நாட்களைத் தாண்டிய போராட்டத்திற்கு மதிப்பளிப்பதாக அரசு கூறினாலும், நடைமுறை சாத்தியக்கூறுகள் மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர் கோரிக்கை: "பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையங்களே காரணம். தமிழகம் தொடர்ந்து முதன்மைத் தொழில் மாநிலமாக நீடிக்க வேண்டுமெனில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கையாண்டு பரந்தூர் திட்டத்தை நிறைவேற்றுவதே புத்திசாலித்தனம்." விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதிப்பைக் குறைக்க உயர்தர இழப்பீடுகள், மாற்று நிலங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கிவிட்டு, மத்திய அரசின் ஆதரவோடு பரந்தூர் திட்டத்தைத் தொடர்வதே தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கும், இதர மாவட்டங்களின் புதிய விமான நிலையக் கனவுகளுக்கும் சாதகமாக அமையும் என்பதே எதார்த்த நிலைப்பாடு.7 ஆண்டுகால உழைப்பு வீணாகிறதா?
மத்திய அரசின் அழுத்தம் ஏன் முக்கியம்?
த.வெ.க அரசின் பிடிவாதம்: மாற்று வழி என்ன?