பரந்தூர் விவசாயிகளிடம் மீண்டும் நிலம் ஒப்படைக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதில்

  • சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆலோசித்த பின் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிய அவர், விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துவிட்டார். அதிமுக ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு திமுக ஆட்சியின் போது ஒப்புதல் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    Advertisement

    மறுபக்கம் பரந்தூர் விவசாயிகள் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனிடையே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அந்த இடங்கள் தொழில் தொடங்க பயன்படுத்தப்படும் என்றும், தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார்.

    ஆனால் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு மீண்டும் விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பரந்தூரில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட தொல்லியல் துறை பொக்கிஷமான கம்பன் கால்வாய் உள்ளது. அங்கிருந்து கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.

    Advertisement

    இந்த பகுதி ஒரு சுற்றுச்சூழல் சங்கிலியாகவும் உள்ளது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வந்தார்கள். விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது, குழந்தையிடம் இருந்து தாயை பிரிப்பதற்கு சமம். நமக்கு விமான நிலையமும் வேண்டும்.. விவசாயமும் வேண்டும். முதல்வர் விஜய் இதனைத்தான் சொல்கிறர். பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தார்கள்.

    பரந்தூர் விமான நிலையத்திற்காக வழங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆலோசித்த பின் தான் முடிவு எடுக்க முடியும். இந்த ஆலோசனைக்கு பின் விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    English Summary

    Parandur Airport: Minister Rajmohan Responds on Returning Acquired Parandur Airport Lands to Farmers