சென்னை கேம் ஓவர்! அதிகாரிகள் சொல்லியும் பரந்தூரை ரத்து செய்த விஜய்! அதே ஜெயலலிதா ஸ்டைல் முடிவு!

  • சென்னை: சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத் திட்டம் பரந்தூரில் கைவிடப்படுவதாக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்திலும், தொழில் துறையிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், தலைமைச் செயலக வட்டாரங்களிலும் அரசியல் விமர்சகர்களிடையும் வேறு ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

    Advertisement

    கடந்த காலங்களில் அரசியல் ஈகோ காரணமாக திமுக கொண்டுவந்த மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிடப்பில் போட்டது போலவே, தற்போது பரந்தூர் விவகாரத்தில் முதல்வர் விஜய் செயல்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஐஏஎஸ் அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறப்பட்ட விவாதங்களும்

    பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வது சென்னை மற்றும் தமிழகத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று அரசுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விரிவான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கம் தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும் என்றும், சர்வதேச சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னைக்கு உடனடியாக இரண்டாவது பிரம்மாண்ட விமான நிலையம் அவசியம் என்றும் நிதி மற்றும் தொழில் துறை செயலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்கள் நவீன உள்கட்டமைப்பில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், பரந்தூர் போன்ற மெகா திட்டத்தை கைவிட்டால் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடும் என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியான ஆலோசனைகளைத் தாண்டி, தேர்தல் களத்தில் தான் அளித்த வாக்குறுதியையும், தனது அரசியல் செல்வாக்கையும் நிரூபிக்கும் முனைப்பிலேயே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் மதுரவாயல் பாணி அரசியல்?

    2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலத் திட்டத்தைக் கூவம் நதி சீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். அந்த ஒரு முடிவால் திட்டம் சுமார் பத்தாண்டுகள் முடங்கி, சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசல் தீராப் பிரச்சினையாக மாறியதுடன் திட்ட மதிப்பீடும் பல மடங்கு உயர்ந்தது.

    Advertisement

    தற்போது பரந்தூர் விவகாரத்திலும் அதே அரசியல் நிழலாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. முந்தைய திமுக அரசால் திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் கொள்கை அளவிலான அனுமதியைப் பெற்ற பரந்தூர் தளத்தை மாற்றினால், புதிய இடத்தை தேர்வு செய்து, ஆய்வு நடத்தி, அனுமதிகள் பெறுவதற்குள் குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வீணாகும். "திமுக கொண்டுவந்த திட்டம் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடாது என்ற தனிப்பட்ட ஈகோவுக்காகவும் சென்னை நகரின் வளர்ச்சியை விஜய் பலிகடா ஆக்குகிறார்" என்ற கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

    எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா?

    பரந்தூர் திட்ட ரத்து ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்குக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தொழில் துறையினரிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. மாற்று இடத்தை அரசு விரைவில் தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் என அனைத்து நடைமுறைகளையும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    Advertisement

    மக்கள் நலன் என்ற முகமூடிக்கு பின்னால் நிர்வாக ரீதியான முடிவுகளை அரசியல் பிடிவாதங்கள் ஆக்கிரமிக்கும்போது, அதன் பாதிப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்பதற்கு மதுரவாயல் ஒரு பாடமாக அமைந்தது. இப்போது அதே பாதையில் பரந்தூர் விவகாரமும் நகர்கிறதா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    English Summary

    Parandur Airport Scrapped: Political Ego of Vijay finally wins