பரந்தூரில் கைப்பற்றப்பட்ட நிலத்தை.. வேறு திட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா? திமுக சொன்ன பாயிண்ட்

  • சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூறியிருக்கின்றன.

    Advertisement

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கும் நிலையில், இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    பரந்தூர் விமான நிலையம்

    சென்னையில் தற்போது இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையம் விரைவில் அதன் முழு செயல்திறனை எட்ட இருக்கிறது. இதனால், புதிய விமான நிலையத்திற்கான தேவை எழுந்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகளை கடந்த திமுக அரசு முன்னெடுத்தது.

    நோக்கம் நல்லதாக இருந்தாலும்.. விமான நிலையம் வரும் இடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள், புதிய விமான நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சூழலியல் அமைப்புகளும் குரல் கொடுத்திருந்தன. தவெக தலைவராக இருந்த விஜய்யும் மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார். தற்போது விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில், விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    திமுக எதிர்ப்பு

    இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதால் சென்னையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று விமர்சித்து வருகின்றன. மறுபுறம், இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் கூறி வருகின்றன.

    திமுகவின் பாயிண்ட்

    சட்டமன்றத்தில் நேற்று இது குறித்து பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, "விமான நிலையம் அமைப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நிலத்தை கையகப்படுத்தும் பணியை மட்டுமே தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால், திமுகவினர் மட்டுமே செல்லப்போகிறார்கள் என்பதை போல பேசுகின்றனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் கூடுகிறது.

    Advertisement

    தமிழகத்தையும் அதுபோன்று முன்னேற்ற.. திமுக அரசு முயற்சி எடுத்தது. திட்டத்தை ரத்து செய்து விட்டதால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது" என கூறியுள்ளார்.

    பாமக வலியுறுத்தல்

    எ.வ.வேலுவை தொடர்ந்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், "பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. ஆனால், தமிழகத்திற்கு கூடுதல் விமான நிலையம் அவசியம். ஒரு திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை, வேறு பயன்பாட்டிற்கு மாற்ற சட்டத்தில் இடமில்லை. இன்னொரு விமான நிலையம் இல்லாமல்.. 1.50 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லை" என்று கூறினார்.

    Advertisement

    கடைசியாக பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறது. மாற்று திட்டத்திற்கு பரந்தூரில் தேர்வு செய்யப்பட்ட நிலம் பயன்படுத்தப்படும்" என்று பதிலளித்துள்ளார்.

    English Summary

    Parandur land row: Parties including the DMK and PMK have stated that the land acquired for the Parandur airport cannot be used for other projects.