சென்னை: பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டலாம். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது. அவ்வாறு பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை திறக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, சரத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்
மேலும், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர்," சமூகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுமே பெரிய குற்றங்கள்தான் ஆனால் அந்த எல்லாக் குற்றங்களுக்கும் தாய்மடியாக இருப்பது போதைதான். இந்த போதை கலாச்சாரம் என்பது உடனடியாக வந்தது கிடையாது. கடந்த பல ஆண்டுகளாகவே வீதியெங்கும் அது எப்படிப் பரவிக் கிடக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். இப்போது அதை ஒவ்வொன்றாக நாம் கலைத்து வருகிறோம். அதன்படியே பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதையில் இருக்கும் போதை நமக்கு வேண்டாம் என்ற உன்னத நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக 716 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டலாம். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது. அவ்வாறு பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பெற்றோர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் தயவுசெய்து பள்ளி படிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு மோட்டார் பைக்கையோ மொபைல் போனையோ வாங்கிக் கொடுத்துக் கெடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களைக் கொடுங்கள். நோட்டு பேனாக்களைக் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள்" என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.ராஜ்மோகன்
டாஸ்மாக் கடைகள்
பள்ளி மாணவர்கள்
மொபைல் போன்