சென்னை: ரயிலில் பயணம் செய்த ஒரு குடும்பத்தினர் லக்கேஜ் அதிகம் வைத்திருந்ததால், ஸ்டேஷனில் இறங்க தாமதம் ஆனது. மூத்த மகள் மற்றும் லக்கேஜ்களை கீழே இறக்கிய தாயால் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியை பிளாட்பாரத்தில் இறக்கிவிடும் முன்பே ரயில் கிளம்பத் தொடங்கியது. இதனால் ஒரு நிமிடம் பரிதவித்து போன அந்த தாய்க்கு, ரயிலில் இருந்த பயணி ஒருவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்து அந்த குழந்தையை பத்திரமாக பிளாட்பாரத்தில் இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் ஓடும் ரயிலில் ஏறி சென்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பெயர் கூட தெரியாத அந்த பயணிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ரயில் பயணங்களின் போது எதிர்பாராமல் ஏற்படும் சில சிக்கல்களுக்கு சக பயணிகள் ஆபத்பந்தவனாக வந்தும் உதவும் செயல்கள் பயணிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இப்படியான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக ஓடும் ரயிலில் இருந்து சிறுமி ஒருவரை பயணி ஒருவர் இறக்கிவிடும் காட்சிகள் இன்ஸ்டகிராமில் வைரல் ஆகி வருகின்றன. நெட்டிசன்களையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த விவரங்களை பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஓயல் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயில் நிலையத்தில் இறங்க இருந்தார். ரயில் ஸ்டேஷனில் சில வினாடிகள் மட்டுமே நிற்கும் என்பதால், தாங்கள் கொண்டு வந்த லக்கேஜ்களை கையில் எடுத்துக்கொண்டு தயாராக நின்று இருந்து இருக்கிறார். ரயில் நின்றதும் பெண்ணும், அவருடைய மூத்த மகளும் தங்கள் லக்கேஜ்களை ஸ்டேஷனில் இறக்கி வைத்துவிட்டு அவர்களும் இறங்கியுள்ளனர். சுமார் 4, 5 வயதே இருக்கும் இளைய மகள் ரயிலில் இருந்து இறங்குவதை அவர்கள் கவனிக்கவில்லை. சுதாரிப்பதற்குள் ரயில் மூவ் ஆக தொடங்கியதால் சிறுமியின் தாயார் செய்வதறியாது அலறினார். ஆனால், இதனை உணர்ந்த நபர் ஒருவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் அந்த சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து பத்திரமாக இறக்கிவிட்டார். பின்னர் திரும்பி கூட பார்க்காமல் அதே ரயிலில் ஓடிச்சென்று ஏறி கிளம்பினார். இந்த காட்சிகளை ரயில் நிலையத்தில் நின்ற பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள்தான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தனது உயிரையும் பணைய வைத்து சிறுமியை பத்திரமாக தாயுடன் சேர்த்த அந்த நபரின் செயல் உண்மையாகவே பாராட்டுக்குரியது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள் கூறுகையில், இப்படியான நபர்கள் இருப்பதால்தான், இன்னமும் மனிதம் இங்கே உயிர்ப்புடன் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், தாயார் அஜாக்கிரதையாக இருந்ததையும் இங்கே கவனிக்க வேண்டும். இருந்தாலும் அந்த சக பயணியின் செயல் பாராட்டுக்குரியது என்று பதிவிட்டுள்ளார்.ஒரு நொடி கூட யோசிக்காமல் இளைஞர் செய்த செயல்
நெட்டிசன்கள் பாராட்டு