“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

  • சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகார் செய்த பயணிகளிடம் அமைச்சர் பார்த்திபன் சம்பந்தமே இல்லாமல் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள், அமைச்சர் பார்த்திபனிடம் போதிய பேருந்துகள் இல்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை எனவும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், நடைமேடையில் காத்திருந்த பயணிகளிடம் எங்கு செல்கிறீர்கள்? எனக் கேட்டு, முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில், முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்ததால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    Advertisement

    பயணி ஒருவர், "துறையூர் பகுதிக்கு செல்ல நான் முன்பதிவு செய்திருந்தேன். எனது பேருந்து இரவு 10.30க்கு வர வேண்டும். ஆனால் தற்போது 11:45 ஆகியும் பேருந்து குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை" என அமைச்சரிடம் முறையிட்டார்.

    அதற்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன், "நீ நல்லா சாப்பிட்டு இருக்க.. நான் இன்னும் சாப்பிடல.. நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல.." என சம்பந்தம் இல்லாமல் பேசினார். அமைச்சர் பார்த்திபன், பயணியிடம் ஒருமையில் பேசியது அங்கிருந்த பயணிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    மேலும் பயணி ஒருவர் புகார் தெரிவித்த நிலையில், 'வால்வோ பஸ் பற்றி பேசுங்க.. இல்ல தமிழ்நாடு அரசு பஸ் பற்றி பேசுங்க' என்றார் அமைச்சர் பார்த்திபன். அதற்கு அந்தப் பயணி, "சார் நான் SETCல இருக்கிற வால்வோ பத்தி பேசறேன்" என்றார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி கண்டனங்கள் எழுந்துள்ளன. போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், பயணிகளிடம் சம்பந்தம் இல்லாமல் பேசியது சலசப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Passengers engaged in an argument with Transport Minister Tamizhan Parthiban who was conducting an inspection at the Kilambakkam bus terminus - complaining that there were insufficient buses. Minister Parthiban's completely irrelevant response to the complaining passengers has sparked a controversy.