பட்டா மாறுதல் அதிரடி உத்தரவு.. 30 நாட்களுக்குள் வழங்கக் காலக்கெடு! இனி 100% ஆன்லைன் வரைபடம்


  • சென்னை: தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குபவர்களின் மிக முக்கியத் தேவையாக இருப்பது பட்டா மாறுதல் ஆகும். இதில் குறிப்பாக ஒரு பெரிய நிலத்தைப் பிரித்து வாங்கும் போது செய்யப்படும் உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு (Subdivision Patta Transfer) பொதுமக்கள் நீண்ட மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இப்படியொரு தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணிகளை அதிவேகமாக முடிக்கவும் நில அளவை மற்றும் வருவாய்த் துறை மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    வழக்கமாக, பொதுமக்கள் பத்திரப்பதிவு முடிந்ததுமே தாலுகா அலுவலகங்களுக்கு அலையாமல், இ-சேவை மையங்கள் வாயிலாகவே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

    Advertisement

    பட்டா மாறுதல் உத்தரவு

    இந்த விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சம்பந்தப்பட்ட விஏஓ அதாவது கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து நிலத்தை மீண்டும் அளந்து உட்பிரிவு எண் உருவாக்க வேண்டிய தேவையுள்ள கோப்புகள் சர்வேயர் அதாவது நில அளவையாளருக்கு மாற்றப்படுகின்றன.

    இந்த நடைமுறையில், நிலத்தை அளந்த பிறகு, அது தொடர்பான அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிப்புப் பணிகளை நில அளவையாளர்கள் இதுவரை மேனுவல் முறையில் காகிதத்தில் மேற்கொண்டு வந்தனர். பிறகு அதனை மீண்டும் ஆன்லைனில் பதிவேற்றும் இரட்டை வேலை நீடித்து வந்தது.

    மேனுவல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி

    இந்த மேனுவல் நடைமுறைக்குத்தான் இப்போது அரசு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனிவரும் காலங்களில் Subdivision Sketches எனப்படும் உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான வரைபடங்கள் மற்றும் துறை ரீதியான குறிப்புகள் எழுதுதல் போன்ற அனைத்துப் பணிகளும் 100 சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிஜிட்டல் முறையில் கையாளப்பட வேண்டும் என்று நில அளவைத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து நில அளவையாளர்களும் தங்களுக்கு அரசு வழங்கியுள்ள லேப்டாப்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கெல்லாம் காரணம், பொதுமக்களுக்கு சேவை வழங்கும் கால அவகாசத்தைக் குறைப்பதே இந்த புதிய தொழில்நுட்ப மாற்றத்தின் முதன்மை நோக்கமாகும்.

    Advertisement

    உட்பிரிவு பட்டா - ஆன்லைன் சேவை

    லேப்டாப் மூலம் ஆன்லைனிலேயே வரைபடங்கள் உடனுக்குடன் அப்லோடு செய்யப்படுவதால், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் பணிகளை அதிகாரிகள் முழுமையாக முடித்து வழங்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. புரோக்கர்களின் தலையீடே இல்லாமல் பொதுமக்கள் தங்களின் புதிய உட்பிரிவு பட்டாவையும் குறுகிய காலத்தில், வெளிப்படையான தன்மையுடன் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்ள இந்த புதிய விதிமுறை வழிவகை செய்துள்ளது..

    நிலத்தை அளந்து, அதுதொடர்பான குறிப்புகள் எழுதுதல், வரைபடம் அளித்தல் போன்ற பணிகளை, மேனுவல் முறையில் மேற்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

    English Summary

    The Tamil Nadu Land Survey and Revenue Department has mandated fully digital processing for subdivision patta transfers. By utilizing laptops and online systems, officials aim to eliminate manual paperwork and intermediary interference, ensuring citizens receive their land subdivision documents within 30 days through a transparent, efficient digital service process.