லஞ்சம் இல்லாமல் 30 நாளில் பட்டா! வருவாய்த்துறையில் வந்த அதிரடி மாற்றம்.. குவியும் விண்ணப்பங்கள்

  • சென்னை: வருவாய்த்துறையில் நிலவிய லஞ்ச கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பட்டா மாறுதல் விண்ணப்பப் பரிசீலனையில் தேவையில்லாத அதிகாரிகள் தலையீடு மற்றும் நேரில் அழைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    அரசுத் துறைகளிலேயே அளவுக்கு அதிகமாக பணப்பழக்கம் உள்ள துறை என்றால் அது வருவாய்த்துறைதான்... அதனால்தான், சாதாரண சான்றிதழ் வாங்குவதற்குகூட லஞ்சம் கேட்கும் நிலை தொடர்கிறது.

    Advertisement

    விஏஓ முதல் தாசில்தார் வரை லஞ்சம் வாங்கி கைதாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. இதில் பெண் அதிகாரிகளும் விதிவிலக்கு கிடையாது. பொதுவெளியில் அசிங்கப்பட்டு, சுற்றிவளைக்கப்பட்டு கையும் களவுமாக சிக்கி கைதாகினாலும், மீண்டும் இன்னொரு அரசு அதிகாரி கைதாவது மலிந்து விட்டது.

    வருவாய்த்துறை அதிரடி

    இதனிடையே, தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு முடிந்த நிலையில், பட்டா மாறுதலுக்காக தாலுகா அலுவலகம் சென்று விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. பிறகு பொதுமக்கள் தாலுகா அலுவலகம் செல்லாமல், இ - சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அப்படி இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்தாலும், அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மக்களை நேரில் அழைப்பது தொடர்ந்தது. இதற்கு விண்ணப்பதாரர்கள் உடன்படாத நிலையில், கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி, அவர்களின் விண்ணப்பங்களை, 30வது நாளில் அதிகாரிகள் நிராகரிப்பதும் வழக்கமாகவே இருந்தது. இதனால், மக்கள் மறுபடியும் மறுபடியும் விண்ணப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    லஞ்சம் இல்லாமல் பட்டா

    இந்நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பட்டா மாறுதல் பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் முடிக்க வேண்டும் என்று வருவாய் துறை உத்தரவிட்டது. முக்கியமாக விண்ணப்பங்கள் பரிசீலனையில் சில நடைமுறை மாற்றங்கள் அமலாகியிருக்கின்றன..

    Advertisement

    இப்போது, தமிழகத்தில் பத்திரப்பதிவின்போது, சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாகவும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், மக்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.. இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தேவையில்லாத தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன..

    கடந்த ஜூலை மாதம் மட்டும், ஊரகப் பகுதிகளில் உட்பிரிவு உருவாக்க தேவையில்லாத, 1.68 லட்சம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.. அவைகளில் 1.31 லட்சம் விண்ணப்பங்கள், 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.. உட்பிரிவு உருவாக்கும் தேவையுள்ள நிலையில், 1.71 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.. அதில், 1.39 லட்சம் விண்ணப்பங்கள் முடிக்கப்பட்டு, பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    30 நாட்களுக்குள் பட்டா மாறுதல்

    அதுமட்டுமல்ல, விண்ணப்பதாரரை நேரில் அழைப்பது தவிர்க்கப்பட்டிருப்பதால், லஞ்சம் எதுவும் கொடுக்காமல், 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு பட்டா மாறுதல் கிடைத்துள்ளது.. இதனால், புதிதாக வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

    முன்பெல்லாம், ஒரு குறிப்பிட்ட, இ சேவை சென்டரிலிருந்து, வழக்கமாக ஒரு நாளைக்கு, 200 விண்ணப்பங்கள் பதிவாகி கொண்டேயிருந்ததாம். ஆனால் இப்போது 350 விண்ணப்பங்கள் பதிவாகி வருகின்றனவாம்.. வருவாய்த்துறையில் நடந்துள்ள இந்த சூப்பர் மாற்றங்கள், பொதுமக்கள் மத்தியிலும் பெருத்த நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!

    டபுள் ஹேப்பி நியூஸ்

    தமிழ்நாட்டில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம், இன்று ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள எண்ணற்ற எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    Advertisement

    ஏற்கனவே இப்படியொரு மகிழ்ச்சி அறிவிப்பு அரசு தரப்பில் வெளியாகியுள்ள நிலையில், எந்தவிதமான லஞ்சமும் இல்லாமல் சுலபமாகப் பட்டா மாறுதல் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது, டபுள் ஹேப்பியை மக்களுக்கு தந்து வருகிறது..!!

    English Summary

    Patta Transfer Without Bribe in 30 Days.. Important News on Major Change in Tamil Nadu Revenue Department