புதிய தலைமை செயலகம் வேண்டாம்! மக்களுக்கு வீடு கட்டி குடுங்க! கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்

  • சென்னை: பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    செப்.3ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சென்னையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். இதுதான் தற்போது புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

    Advertisement

    புதிய தலைமை செயலக வளாகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பட்டினம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களின் நிலை என்ன? இவர்களை எங்கு அப்புறப்படுத்தப்போகிறீர்கள்? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மக்களின் மனநிலையை அறிய 'ஒன் இந்தியா' நேரடியாக களத்திற்கு சென்றது. மீனவ மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.

    "வலைக்கு போவது, பிடிக்கப்படும் மீன்களை விற்று குடும்பத்தை நடத்துவது. இதுதான் எங்க வாழ்வாதாரம். அவங்க சொல்றதை போல நாளைக்கு இங்க புது தலைமை செயலகம் வருதுன்னா.. கவுச்சு நாத்தம் அடிக்குது, எல்லோரையும் காலி பண்ணுங்கனு சொல்லிடுவாங்க. பார்வைக்கு நல்லா டீசண்டா இருக்கனும்னு சொல்லுவாங்க. மீன் கடையை போட கூடாதுனு சொல்லுவாங்க. அப்போ நாங்க எங்க போகுறது? தலைமுறை தலைமுறையாக நாங்க இந்ததான் வாழ்ந்து வரோம். அதிகாரிங்க வராங்க.. அவங்க வராங்க, இவங்க வராங்கனு சொல்லி, மீன் கடையை எடுக்க வச்சா நாங்க எங்க போகுறது?

    Advertisement

    ஒடுக்கப்பட்ட, உழைக்கக்கூடிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய, எங்களை மாதிரியான விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய கடல் சார்ந்த தொழில், சிறு குறு கடைகள் அனைத்தும் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படும். மக்கள் ஓட்டு போட்டுதான் நீங்க ஆட்சிக்கு வந்திருக்கீங்க.. ஆனா, இதுநாள் வரை எங்களை வந்து யாராச்சும் பா்த்து இருக்கீங்களா? எங்களின் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரியுமா? போன மாதம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்தோம் யாராவது வந்தார்களா? யாரும் வரவில்லை. இப்படி இருக்கும்போது.. திடீர்னு எங்க இடத்துல வந்த தலைமை செயலகம் கட்டுறோம்னு சொன்னா நாங்க எப்படி ஒப்புக்கொள்வோம்?

    Advertisement

    எவ்வளவோ திரைப்படங்களில் பார்த்ததில்லையா? பெரிய கட்டிடங்கள் வருகிறது எனில், மொதல்ல எங்களை போன்ற சிறிய வியாபாரிகளை காலி பண்ணிடுவாங்க. அவங்களுக்கு இதை பார்க்கும்போது அசுத்தமாகவும், நாற்றமாகவம் தெரிகிறது. ஆனால் எங்களுக்கு இதுதான் சோறு போடுது.

    ஏற்கெனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு புதிய கட்டிடம் எதற்கு? திமுக ஆட்சியில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதே.. அப்படி மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுங்க. எங்க தாத்தா காலத்தில் தொடங்கி.. லைட்ஹவுஸ் முதல் பட்டினம்பாக்கம் வரை மீனவர்களாகிய நாங்கள்தான் இங்கு இருக்கிறோம். எங்க பூர்வீகம் இதுதான், ஆனா இங்க இருந்து போக சொன்னா எங்க போகுறது? எங்கள் வீட்டில் படித்த பிள்ளைகள் கூட.. இந்த இடம் அசுத்தம் என நினைத்து வெளியே போகவில்லை.

    Advertisement

    தலைமை செயலகம் கட்டிவிட்டால், இங்கிருந்து நாற்றம் வருகிறது, அசுத்தமாக இருக்கிறது, ரோடு சுத்தமாக இல்லை என்று சொல்வீர்கள். அப்படியெனில் எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு நாங்கள் போக முடியுமா?" என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Pattinapakkam Fishermen: Fishermen have expressed strong opposition to the announcement that a new Legislative Assembly and Secretariat complex will be constructed in Pattinapakkam.