சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த நபரின் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது மனைவியும், ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் சூட்கேஸில் தலை துண்டிக்கப்பட்ட ஒரு சடலம் இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு புகார் கொண்டனர். இதையடுத்து புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துகுமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸார் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் காணாமல் போன ஆண் தொடர்பான புகார்களை வைத்து தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அது போல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் மற்ற மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் வருவதால் அண்டை மாநிலங்களிலும் காணாமல் போன ஆண் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தலையில்லாத உடலுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். கொலையுண்டவரின் உடலில் வேறு எங்கேனும் காயங்கள் இருக்கிறதா என்பதை போலீஸார் ஆய்வு நடத்தினர். சடலம் இருந்த இடத்தை சுற்றி சிசிடிவி இல்லாதது கொலையாளிகளுக்கு மிகவும் சாதகமாக போய்விட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் சிசிடிவியும் பழுதடைந்துள்ளதால் அந்த ரயில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் நீல நிற சூட்கேஸ் கொண்டு வந்த நபர் யார் என்பதை போலீஸார் அடையாளம் காணும் முயற்சியை செய்தனர். இந்த நிலையில் கொலையானவர் யார் என்ற அடையாளம் இன்று தெரியவந்துள்ளது. அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அமீர் அலி என்று தெரியவந்தது. இவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவி ,ஆண் நண்பரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.