சென்னை: தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், வர்க்க பேதம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பெரும் சமர் புரிந்தவர் பெரியார். கடந்த நூறாண்டுகளாக தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கி வருபவர் பெரியார்.
ஈரோட்டில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பெரியார். சிறு வயதிலேயே வணிகத்தில் கவனம் செலுத்திய பெரியார், தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வாரணாசி சென்றார். அங்கு அவர் கண்ட மனிதாபிமானமற்ற காட்சிகளே அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றியது.
அதன் பின்னர், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றினார். இதனால் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியும் அவரைத் தேடி வந்தது. கல்வியிலும், அதிகாரத்திலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்திய அக்காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்குமான உரிமைகளை பேசினார் பெரியார். பெரியாரின் இடஒதுக்கீடு என்ற முழக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியினரே எதிராக நின்றனர். இதனால் தலைவர் பதவியை உதறிவிட்டு சுயமரியாதை இயக்கம் என்ற தனி இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். 1924ஆம் ஆண்டு கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தால், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோயில் திறக்கப்பட்டது. தீண்டாமையும், சாதிய ஏற்றத் தாழ்வுகளும் உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் பெரியார் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. சாதி ஒழிப்பு சார்ந்த கருத்துகளை தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்த பெரியார், 1929-ல் செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தனது பெயரின் பின்னால் இருந்த சாதியை நீக்கினார். ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், ஈ.வெ.ராமசாமிக்கு பெண்கள் சூட்டிய பெயரே பெரியார். சமத்துவமே பெரியாரின் கொள்கையாக இருந்தது. அதற்கு எதிராக இருந்த சாதி, மதம், பாலின பேதம், மொழி ஆதிக்கம், மூடநம்பிக்கை என அத்தனையும் எதிர்த்து களமாடினார் பெரியார். கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், அச்சுறுத்தல் எழுந்தபோதும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் காட்டினார். தள்ளாடும் வயதிலும் தமிழ்நாடு முழுவதும் சுழன்று பகுத்தறிவு கருத்துகளை முழங்கினார் பெரியார். தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சென்னையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்துகின்றனர். தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் இன்று திராவிடர் கழகம் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும். தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமை கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும். கழகத்தின் 78 ஆம் ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில், கழக கொடிகளை புதுப்பித்து ஏற்றிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.