சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக அமைச்சர் ராஜ்மோகன், இந்த முறைகேடு திமுக ஆட்சியில் நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி ரூபாய் செலவில் 7 ஏக்கர் பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது பெரியார் அறிவுலகம். இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, ஆட்சி மாறிய பின் முதலமைச்சர் ஜோசப் விஜய், பெரியார் அறிவுலகத்தை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பல போலியானவை என எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள் முருகன் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல தமிழ் புத்தகங்களில் இருக்கும் தரவுகள், தகவல்கள் போலியானவை, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார். அகல் விளக்கு என்கிற பெயரிலான பதிப்பகத்தின் சார்பில் 1,800க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அங்கே இருக்கின்றன. பல புத்தகங்கள், போலி புனை பெயர்களில் எழுதப்பட்டிருப்பவை, சுயமாக எழுதப்படாமல் தவறான தகவல்களுடன் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை, 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை ரூ.1,445 என உள்ளது. நூல்களில் காணப்படும் பன்னாட்டு தர புத்தக எண்கள் (ISBN) போலியானவை எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதிலேயே மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவறான தகவல்களோடு மிக மோசமான புத்தகங்களை நூலகத்தில் இடம்பெறச் செய்து அறிவுச் சீர்கேட்டுக்கு வழிவகுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் 'பெரியார் அறிவுலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புத்தகங்கள் வாங்கி இருக்கிறார்கள். ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. நூல்களில் இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க கவனமுடன் செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்" எனக் கூறியிருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக பேசியுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் அறிவுலத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அதை படிக்கும்போது ஒரு பக்கம் வேதனையாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. நானும் ஒரு வாசகர் தான். அந்த பெரியார் அறிவுலகத்தில் இருக்கும் புத்தகத்தின் பெயர்கள் எல்லாம் என் வாழ்நாளிலேயே கேள்விப்பட்டதில்லை. அதில் ஒரு பதிப்பகத்தில் 1,500 நூல்கள் வாங்கியுள்ளனர். அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே புத்தகங்களை வாங்கியுள்ளனர். இது திமுக ஆட்சியில் நடந்திருக்கும் மெகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு. பெரியார் பெயரிலேயே ஊழல் செய்தது வெட்கமாக இல்லையா? அதில் யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளர் பெயரில் கீழடி குறித்து புத்தகம். அதில், கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகம் என்று கூகுளிலில் இருந்து படங்களை எடுத்துள்ளனர். அப்படியொரு சிலையே கீழடியில் இல்லை. பாரதியாரின் கதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். நல்லவேளை அந்த கதையெல்லாம் படிக்காமல் பாரதியார் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர் கூட இதைவிட நன்றாக எழுதுவார். இந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கப்படுகிறது. யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்