பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை அல்ல, திட்டம்!.. விஜய்க்கு தி.க. தலைவர் கி.வீரமணி விளக்கம்!


  • சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்திருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது அவரது அடிப்படைக் கொள்கை அல்ல திட்டம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து திராவிடக் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாவது: நேற்று (23.6.2026) காலை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைபற்றி நடந்த விவாதத்தில் பதில் அளித்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தங்களது ஆட்சியின் கொள்கை நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை விளக்கியபோது, தந்தை பெரியார் கொள்கையில், ''கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றைத் தவிர, மற்ற எல்லாக் கொள்கைகளுக்கும் உடன்பாடு; அதுதான் எங்கள் நிலைப்பாடு'' என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இதுபற்றி முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இதேபோன்று உள்ள பலருக்கும் பெரியாரை முழுமையாகப் புரியவைப்பது நமது கடமை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிப்பைக் கொண்ட, சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்துப் போராடியவர்.

    மண்ணின் உழைக்கும் மக்களை 'சூத்திரர், பஞ்சமர்' என்று படிநிலைப் பிரித்து, அதன் காரணமாகவே வர்ணாஸ்ரமத் தர்மப்படி, உயர்ஜாதி என்றும், தொடக்கூடாத, பார்க்கக் கூடாத, அண்டக் கூடாதவர்கள் (Untouchable, Unseeable, Unapproachable) என்றும் ஜாதி, பிறவி இழிவினை சுமத்தியதோடு, மக்களில் சரி பகுதியான பெண்களையும் - அவர்கள் ''உயர்ஜாதி''ப் பெண்களானாலும்கூட, அவர்களுக்கும் பறிக்கப்பட்ட வாழ்வுரிமை, படிப்புரிமை, சொத்துரிமை, திருமண உரிமை முதலிய உரிமைகளைப் பரவலாக்கி, ஜாதி வர்ண பேத இழிவைத் துடைத்து, அனைவரையும் சம உரிமை, சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும் சமத்துவ சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின் (இயக்கத்தின்) கொள்கை ஆகும்.

    Advertisement

    அந்த வர்ணமும், அதை வற்புறுத்தும் (மனு) ''தர்மமும்'' மனிதர்களால் உருவாக்கப்படவில்லை. கடவுள்களால் எழுதப்பட்டவை'' என்று கூறி, கடவுள்கள் அதற்கு முட்டுக்கொடுக்க வேதங்கள், இதிகாசப் புராணங்கள், கோயில் கருவறைகள், அர்ச்சகர் முறைகள் போன்ற சடங்கு சம்பிரதாயங்களை ஆரியம் உருவாக்கியதால்தான் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், கடவுள், மதம்பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

    ''அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார்'' என்கிறது மனுதர்மம்.

    Advertisement

    அத்தியாயம் 1, சுலோகம் 87. பிறவிக் கொடுமையை நிலை நிறுத்தவே! பிரம்மாவே நான்கு வர்ண ஜாதி முறையை உருவாக்கினார் என்று தெய்வீகப்படுத்துகின்றனர். அதுபோல்,''சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்'' - "நான்கு வர்ணங்களை நானே உருவாக்கினேன்'' என்று கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்வதாக எழுதி வைத்துள்ளனர்.

    இது மனுதர்மத்தை விட சற்று கூடுதலாகவே ஒன்றைத் திணித்தது. '''சுயதர்மம்' என்பதனைக் கர்ம வினைப்படி ஜாதிக்கு விதிக்கப்பட்ட விதிகளை நானே நினைத்தாலும் என்னால் கூட மாற்றவே முடியாது'' என்று ஆணியடித்த இப்பேதம் பிறவிக் கொடுமையை நிலை நிறுத்தவே!

    இதனால்தான், அப்படி ஒரு கடவுள் - இருப்பாரா? இருந்தால், நியாயமா? என்ற ஆய்விலும் ஈடுபட்டு, மறுப்புப் பிரச்சாரத்தினைத் தனது இயக்கத்தின் 'கொள்கையாக' அல்ல; 'பிரச்சாரத் திட்டமாக' முன் வைத்தத் தந்தை பெரியார் அவர்கள் கடவுள் கற்பனை எப்படி, ஏன்? யாரால் உண்டாக்கப்பட்டது? என்று மக்கள் மத்தியில் - ஜாதி என்ற பிறவி பேதத்தையும், இழிவினையும் ஒழிப்பதற்காக கடவுள் மறுப்பில் ஈடுபட வேண்டியவரானார்!

    Advertisement

    ''கடவுளும், மதமும்'' என்ற தலைப்பில் வெளிவந்த பெரியாரின் தலையங்கம் ''முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியாவது, சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும், அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம்.

    அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய, உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை'' என்பதிலிருந்து பெரியாரின் உள்ளம் புரிகிறது.

    Advertisement

    மானுட மேம்பாட்டிற்கும், மனித நேயத்திற்கும் கடவுளும், மதமும் தடையாக இருப்பதால் அதனை எதிர்க்கும் அணுகுமுறையை மேற்கொண்டார் பெரியார் என்பது தெளிவு. எனவே, கடவுள், மத மறுப்பு என்பது திட்டம் ('Policy'), மனிதநேயம், பகுத்தறிவு, சமத்துவம், சுதந்திரம் என்பன கொள்கைகள் (Principles) கொள்கை மாறாதது, வழிமுறைகள் - திட்டங்கள் மாறக்கூடியன என்பதைப் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் முடிவுரையில் பெரியார் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு, இந்த விளக்கக் கட்டுரை 'குடி அரசு' இதழில் எழுதப்பட்டது. 28.07.1929 'குடி அரசு' இதழில் ''கடவுளும், மதமும்'' என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கக் கட்டுரையாகும். எந்த இயக்கமானாலும் 'கொள்கைகள்' மாறாக் கூடாதவை. திட்டங்கள் மாறக்கூடியவை (எப்படிப் போரில் கருவிகள் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப மாறி வருகின்றனவோ அதுபோல).

    எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய், அவரைப் போலவே சிந்தனை கொண்டவர்களுக்கும் நமது இந்த விளக்கம் மிக முக்கியத் தேவையானது. தந்தை பெரியாரின் ''கடவுள் மறுப்பு'' என்பது முக்கியக் கொள்கை அல்ல; மாறாக திட்டம்! இம்மாதிரி ஒரு பதிலை - அதாவது தந்தை பெரியாரின் ''கடவுள் மறுப்பு'' என்பது அவரது கொள்கை அல்ல;

    மாறாக திட்டம் ஜாதி, தீண்டாமை அழிப்பிற்கு என்பதை - பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ''மாலன்'' அவர்கள் 'தினமணி' நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது என்னை ஒரு பேட்டி எடுத்து, அதனை 'தினமணி' நாளேட்டில் வெளியிட்டபோதே இதே விளக்கத்தை நான் கூறியது அப்போது வெளிவந்துள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

    எனவே, மீண்டும் பலரும் தெளிவடைய, புரிதல் அடையவே இந்த விளக்கம். ''தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல! அதே நேரத்தில் கடவுள் ஒன்று கிடையாது என்பது அவரது சிந்தனைக் கூர்மையின் உச்சம் - பகுத்தறிவு நிலைப்பாட்டில்! அவரது வேலைத் திட்டம் அது!''எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Dravidar Kazhagam president K. Veeramani said Periyar’s opposition to God was a strategic approach to eradicate caste discrimination, not his core ideological principle.