சென்னை: தமிழக கோயில்களில் பின்பற்றப்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில் 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது முக்கியமான கோயில்களில் நடைமுறையில் உள்ளது.
கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்து, சிறப்பு தரிசனம் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்க எந்த சட்டப் பிரிவும் அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்கு பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண தரிசன முறை காரணமாக, சாதாரண மக்கள் சாமி தரிசனத்துக்காக கோயில்களில் கூட்ட நெரிசலில் பல மணி நேரம் பொது தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், புதுமண தம்பதிகள், வேண்டுதலுக்காக பால் குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம். கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.