இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.. ஐகோர்ட்டில் வழக்கு.. தவெக வேட்பாளர்களுக்கு சிக்கல்?

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்தச் செலவுகளுக்கு வேட்பாளர்களையே பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    A PIL has been filed in the Madras High Court seeking a stay on holding by-elections for the Maduranthakam and Dharapuram Assembly constituencies.