அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைக்க திட்டம்.. மாவட்ட செயலாளர் ரகசிய ஆலோசனை! எடப்பாடி ஏற்பாரா?

  • சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. இந்நிலையில் தான் அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைப்பது தொடர்பாக அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் - அணி நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. மொத்தம் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் 7 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக நேற்றைய தினம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி விஜயபாஸ்கள் மற்றும் கரூர் தொகுதி எம்எல்ஏவும், மாஜி அமைச்சருமான எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் ஐக்கியமாகினர்.

    Advertisement

    இதுதவிர முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் பல நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் தான் அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைத்து வர சில மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ரகசியமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனராம். இந்த ஆலோசனையில் அண்ணாமலைக்கு தமிழகத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. தற்போது அவர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவரை அதிமுகவிற்கு கொண்டு வந்தால் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்று அவர்கள் ஆலோசித்துள்ளனராம்.

    Advertisement

    பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் சட்டசபை தேர்தல் வரை பாஜகவில் செயல்பட்டு பிரசாரங்கள் செய்தார். தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தேர்தல் முடிவடைந்த பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோரை சந்தித்து ராஜினாமா பற்றி தெரிவித்து விலகினார்.

    அண்ணாமலை தற்போது We The Leaders எனும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதில் உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலையை அதிமுகவில் சேரும்படி அழைப்பு விடுக்க சில மாவட்ட செயலாளர்கள் - அணி நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Annamalai Likely to invite from AIADMK: AIADMK MLAs are resigning one after another to join Chief Minister Vijay's TVK, causing the AIADMK party to gradually disintegrate. Amidst this situation, sensational reports have emerged indicating that the party's district secretaries and wing office-bearers have held secret consultations regarding inviting Annamalai to join the AIADMK.