சென்னை: தமிழகத்தில், 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மறுவரையறை பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025 ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இவர்களின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. 28 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் 2027 ஏப்ரம் 19 ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அக்டோபர் 19 ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவுக்கு வந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, ஏப்ரல் 19 ஆம் தேதி வரை, 6 மாதங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்டோபர் 19 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பாஸ்கரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாலும், புதிதாக ஒன்பது பஞ்சாயத்து யூனியன்கள், 93 புதிய கிராம பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாலும், 23 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை என காரணம் கூறி, சிறப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டியுள்ளது பற்றி அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன பிரிவு மீறப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தாமல் இருக்க, வார்டு மறுவரையறையை காரணமாக கூற முடியாது என உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது. ஜனநாயக நடைமுறையில் பங்கேற்கும் வாய்ப்பை மறுக்கும் வகையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், குறித்த காலத்துக்குள் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டு நடைமுறைகளை முடித்து, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்; சிறப்பு அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.