தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.. குதிரை பேரம்.. உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு

  • சென்னை: தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களில் மட்டுமே தவெக வென்றது. காங்கிரஸ் கட்சி (5 எம்.எல்.ஏக்கள்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 எம்.எல்.ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 எம்.எல்.ஏக்கள், விசிக 2 எம்.எல்.ஏக்கள் என கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

    Advertisement

    தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கடந்த 13 ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏக்களும் தவெகவிற்கு ஆதரவு அளித்தனர். இதனால், 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை காட்டியது.

    அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு அளித்த விவகாரத்திலும் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி ஆதரவு அளித்த விவகாரத்திலும் குதிரை பேரம் நடத்தப்பட்டு இருப்பதாகவும் பதவி ஆசை காட்டி தங்கள் அணிக்கு விஜய் இழுத்து இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    பெரும்பான்மையை நிரூபிக்கும் போது நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணை முடியும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Supreme Court: A writ petition has been filed in the Supreme Court seeking President’s Rule in Tamil Nadu. The plea also requested a CBI probe into alleged horse-trading by TVK leaders during the trust vote process to secure majority support in the Assembly.