பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.. மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

  • சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகளை எப்படி பார்க்க வேண்டும், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்கிற முழு விபரத்தை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. அதன்படி 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர். ஈரோடு, சிவங்கை, கன்னியாகுமரி மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.

    Advertisement

    60,527 மாணவர்கள் எழுதிய துணை தேர்வு

    இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு கடந்த ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும். மொத்தம் 60,527 மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடும் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து துணை தேர்வுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "31.07.2026 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று -Result என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Hr Sec First Year and Second Year Supplementary Exam, Jun Jul 2026 Result Statement Of Marks (Provisional Certificate) Download" என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து தங்களது ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Advertisement

    மறு கூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது

    இந்த துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று, ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/- கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என்று கூறியுள்ளனர்.

    English Summary

    60,527 students wrote plus 2 Supplementry exam. The result willbe released today in website said Government exam board.