சென்னை: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி, மோசடி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு வருடந்தோறும் ரூ.6,000 வழங்கும் இந்த அருமையான திட்டத்தில், சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைத் தட்டிப்பறிக்கத் திட்டமிடப்பட்ட சதி அம்பலமாகியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் பிஎம் கிசான் திட்டம்.. இந்த திட்டத்தின் நேரடி பலனை பெற வேண்டுமானால் விவசாயிகள் தங்களது செல்போன் மூலமாகவோ அல்லது ஜன் சேவா கேந்திரங்கள் வழியாகவோ ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் தாலுகா அளவில் பரிசீலிக்கப்பட்டு, பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். இதற்கு பிறகு, மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவிலான சரிபார்ப்புகளுக்கு பிறகு, தகுதியான பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்... விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே, இத்தனை நடைமுறைகள் அமலில் உள்ளன.. இந்த நடைமுறையில்தான், உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாநிலத்தின் குண்டா தாலுகாவில், ஆன்லைனில் தாங்களே பதிவு செய்ய முடியாத சில உண்மையான விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு வசதி உருவாக்கப்பட்டது. அதாவது, தாலுகா அலுவலகத்தின் லாகின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கும் "நேரடி நுழைவு முறை" அங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த வழியில் வந்த விண்ணப்பங்கள் அனைத்துமே, வழக்கமான எந்தவிதமான துறைசார் சோதனையையும் நடத்தாமல், ஸ்டிரைட்டாக மத்திய அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டையை பயன்படுத்தித்தான் முறைகேடுகளும் நடந்துள்ளன.. மொத்தம் 3,18,846 சந்தேகத்திற்கிடமான மற்றும் போலி பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த மோசடி பதிவுகள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பு ரூ.60 கோடியை தாண்டும் என்கிறார்கள். நேரடி பதிவு வசதியை பயன்படுத்தி, 60 கோடிக்கு மோசடியை செய்து, அதில் பலன் பெற முயன்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பதும, இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அரசு காட்டும் கருணையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவ்வளவு பெரிய தொகையை சுருட்டி உள்ளதும், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் உலுக்கியுள்ளது. இதையடுத்து, ஆன்லைனிலிருந்து அந்த நேரடி நுழைவு வசதி உடனடியாக டெலிட் செய்யப்பட்டுள்ளது.. மேலும், இந்த முறைகேடு குறித்து வேளாண்மைத் துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங், போலீசிலும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.. இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் காவல் நிலையத்தினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக, சம்பந்தப்பட்ட 1700 ஐபி முகவரிகள், போலி பயனாளிகள் மீது போலீசாரின் எப்ஐஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்ட விசாரணையின்படி, குண்டா தாலுகா கம்ப்யூட்டர்களின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டு அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டு இந்த மோசடி அரங்கேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.. எனினும் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அரசின் திட்டங்களில் இதுபோன்ற தொழில்நுட்ப ஓட்டைகளும், அதை வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதும், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது...!!பிஎம் கிசான் திட்டம்
உ.பி. அதிர்ச்சி
60 கோடி ஏப்பம் விட்ட சிறுவர்கள்