சென்னை: பாமகவில் இருந்து அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா ஒதுங்க முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ராமதாஸ் - அன்புமணி இணைப்புக்கு பின் திலகபாமாவுக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் சிவகாசியில் தனது கணவர் நடத்தும் மருத்துவமனைக்கு தினமும் செல்ல தொடங்கி இருக்கிறார்.
பாமகவில் பொருளாராக இருக்கும் திலகபாமா, சட்டசபைத் தேர்தலில் விஜய்யை எதிர்த்து பெரம்பூர் தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதிக்கும் திலகபாமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் கட்சி கேட்டு கொண்டதால், திலகபாமா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முந்தைய தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் தோல்வி அடைந்தார்.
இப்படி கடும் போட்டி இருக்கும் தொகுதிகளில் பாமக தலைமை திலகபாமாவை கோர்த்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இருப்பினும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த போது, திலகபாமாவிடம் இருந்துதான் கட்சிக்குள் முதல் ஆதரவு குரல் வந்தது. அப்போது அன்பு தானே எல்லாம் என்று திலகபாமா பதிவிட்டு, அன்புமணி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தற்போது ராமதாஸ் - அன்புமணி இருவரும் கருத்து வேறுபாடு களைந்து ஒன்றாக இணைந்துவிட்டனர். இதனால் திலகபாமா தனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் பாமக ஒன்றுபட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், திலகபாமா எதிர்பார்ப்பு பொறுப்போ, மரியாதையோ இதுவரை கிடைக்கவில்லை. அதேபோல் பாமகவில் செளமியா அன்புமணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பாமகவில் இருந்து ஒதுங்கும் முடிவில் திலகபாமா இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிவகாசியில் இருக்கும் தனது கணவர் மருத்துவமனைக்கு தினமும் செல்ல தொடங்கி இருக்கிறார். நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சமூக ரீதியிலான சேவைகளில் கவனம் செலுத்த திலகபாகா திட்டமிட்டிருக்கிறார். நாடார் என்பதால், பாமகவில் முக்கியத்துவம் தமக்கு அளிக்கப்படவில்லை என்ற எண்ணமும் திலகபாமாவிடம் இருப்பதாக பேச்சுகள் முனுமுனுக்கப்படுகின்றன. இதனால் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு காட்ட உள்ளதாக தெரிகிறது.