பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?

  • சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ந்து உள்கட்சி சிக்கல்களை சந்தித்து வரும் அதிமுகவில், தற்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்து புதிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை" என்ற அவரது கருத்து, அதிமுகவுக்குள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்வது போன்ற காரணங்களால் அதிமுக தலைமை அழுத்தத்தில் உள்ளது.

    Advertisement

    இந்த சூழலில் சி.வி.சண்முகத்தின் கருத்து, அதிமுக எதிர்கால கூட்டணி வாய்ப்புகளையே கேள்விக்குறியாக்கியுள்ளது. உண்மையில், " 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை" என்ற அவரது கருத்து உண்மைதானா? அவர் குறிப்பிடும் தொகுதிகள் என்னென்ன? அங்கு வாக்கு நிலவரம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

    அதிமுக

    அதிமுகவில் குடும்ப அரசியல் வளர்க்கப்படுவதாகவும், கட்சியை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டிய சி.வி.சண்முகம், தேர்தல் முடிவுகள் குறித்தும் முக்கிய கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், "அதிமுக வென்ற பல தொகுதிகளில் பாமக வாக்குகள்தான் வெற்றியை உறுதி செய்தன. அந்த ஆதரவு இல்லையென்றால் பல இடங்களில் வெற்றி கிடைத்திருக்காது" என்று குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக 47 வெற்றித் தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக வாக்கு வங்கியின் பங்களிப்பால் கிடைத்தவை என்றார்.

    Advertisement

    சிவி சண்முகம்

    சி.வி.சண்முகம் நேரடியாக குறிப்பிடாத போதிலும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், வடக்கு மற்றும் வடமேற்கு தமிழகத்தில் உள்ள வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்கின்றனர். சேலம், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமக செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளை கைப்பற்றியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    வன்னியர் வாக்குகள்

    அதேபோல் கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுக வெற்றிக்கு வன்னியர் வாக்குகள் முக்கிய பங்காற்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே பாமக தரப்பில் இதேபோன்ற அதிருப்தி குரல்கள் எழுந்திருந்தன. "அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வாக்குகள் முழுமையாக மாற்றப்பட்டன. ஆனால் பாமக போட்டியிட்ட இடங்களில் அதிமுக வாக்குகள் முழுமையாக வரவில்லை" என்ற குற்றச்சாட்டை அக்கட்சியினர் முன்வைத்தனர்.

    Advertisement

    பாமக

    18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் தர்மபுரி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் போன்ற வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில்தான் வெற்றி கிடைத்தது. இதனால், பாமக தொண்டர்கள் மத்தியில் "நாங்கள் கூட்டணிக்காக வேலை செய்தோம்; ஆனால் அதிமுக தரப்பில் அதே ஒத்துழைப்பு கிடைக்கவில்லை" என்ற மனநிலை நிலவியது. சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு வெறும் கூட்டணி அரசியல் குறித்த கருத்தாக மட்டுமே பார்க்கப்படவில்லை.

    அதிமுக தலைமை

    அதிமுக தலைமையை நேரடியாக விமர்சிக்கும் ஒரு அரசியல் செய்தியாகவும் கருதப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது கூட்டணியின் வெற்றிக்கே பாமக காரணம் என்று கூறப்படுவது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பாமகவுடன் உறவை தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது.

    Advertisement

    அதிமுக - பாமக

    மறுபுறம், அதிமுகவின் சொந்த வாக்கு வங்கி பலவீனமடைந்துவிட்டதாக தோன்றும் வகையிலான கருத்துக்கள் கட்சியின் அடிப்படை தொண்டர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, தேர்தலுக்குப் பிறகு அதிமுக - பாமக உறவில் ஏற்பட்டுள்ள நுண்ணிய விரிசல் தற்போது வெளிப்படையாக தெரிகிறது. பாமக முன்பு கூறிய குற்றச்சாட்டையே தற்போது அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

    கூட்டணியில் தொடருமா?

    இதனால் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. மொத்தத்தில், "31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை" என்ற ஒரு வரி கருத்து, அதிமுகவின் உட்கட்சி மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    English Summary

    CV Shanmugam’s claim that PMK votes secured 31 AIADMK wins has triggered a new debate over alliance strength and electoral reality.