சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாளை (ஆகஸ்ட் 20) அனுமதி வழங்கப்படும் என காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது. போராட்டங்களை ஒடுக்கிவரும் காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை, தமிழகத்தில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டது. கடந்த ஜூலை 18 ஆம் தேதி டிஜிபியிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், உரிய காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு 27 ஆம் தேதி கடிதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, காவல் நிலையங்களில் மனு அளித்துவிட்டு, பிரச்சார பயணம் தொடங்க தயாரான நிலையில், ஜூலை 30ம் தேதி காவல்துறையினரால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் என்ன சமூக விரோதிகளா? சாலையில் போராட்டம் நடத்த கூடாது என்றால் ஹெலிகாப்டரிலா சென்று போரட்டம் நடத்துவார்கள்? என காவல்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், பேரணி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பேரணி குறித்த விவரங்களை தாக்கல் செய்தார். மேலும் திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் என்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு குளப்பிரையில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக முறையிட்டார். மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை இன்று தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, திருநெல்வேலி மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைய தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் நீதிபதி.