விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி புகார்.. விசாரணை தொடங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

  • சென்னை: சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தேன். இது தொடர்பாக, என்னை கைபேசியில் தொடர்பு கொண்ட அப்போதைய மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கர், தேர்வு செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    Advertisement

    வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின்னர், அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி, ரூ.4.50 கோடியைத் திரட்டி விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்தேன்.

    வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் செலவுகளுக்காக நான் கொடுத்த பணத்தைக் கேட்டபோது ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்தனர். மீதித் தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

    மேலும், தற்போது விஜயபாஸ்கர் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், எனது பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், 'இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மனுதாரரை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Police have informed the Madras High Court that they have initiated a preliminary inquiry into a complaint against former Minister C Vijayabaskar, alleging that he cheated a person by failing to return ₹4 crore collected under the pretext of securing a seat for the Assembly election.