சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். தனது வாகனத்தில் காவல் நிலையம் வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் கோரிய நிலையில், போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது காரில் இருந்து இறக்கி காவல் துறை வாகனத்தில் அவரை ஏற்றிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதோடு, ஒருமையில் பேசியதாக கூறி தவெக நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆளும் கட்சியினரின் மேல் பொதுமக்களின் அதிருப்தி குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்துப் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதால் தன்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சற்று நேரத்திலேயே போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது, தனது வாகனத்தில் காவல் நிலையம் வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது காரில் இருந்து அவரை இறக்கி ஆதரவாளர்களின் முற்றுகைக்கு நடுவே போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல் துறையினரின் வாகனத்தை முற்றுகையிட அவரது ஆதரவாளர்கள் முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்பி அலுவலகம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் ஜெயலலிதா காலத்தில் கூட கைது செய்தது கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.