சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெறவிருந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நேற்று இரவு பேருந்துகளில் ஏற முயன்றவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திச் சிறைபிடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் மருத்துவப் பணியாளர்களைக் கழிவறைக்குக் கூட செல்லவிடவில்லை என வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குநர்கள் மூலம், 2012-ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகவும் இடஒதுக்கீட்டைப் பின்பற்றியும் 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் தற்காலிகமாகப் பணிநியமனம் செய்யப்பட்டனர். தினக்கூலி அடிப்படையில் 2,500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
அவர்கள் ஐந்தாண்டு கால சேவையை முடித்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனப் பணிநியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை; தொடர்ந்து தினக்கூலி அடிப்படையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்துத் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலையிலேயே அவர்களின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர், முக்கிய நிர்வாகிகளைச் சென்னையில் வீட்டுக்காவலில் வைத்தனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டவர்களைக் காவல்துறையினர் பேருந்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தினர். இப்படிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்டவர்களைக் காவல்துறையினர் பேருந்துகளில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த பணியாளர்கள், தங்களைப் பயங்கரவாதிகளைப் போல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், கழிவறைக்குக் கூட செல்லவிடவில்லை என்றும் கிருஷ்ணகிரியில் இருந்து போராடப் புறப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் , "ஹாஸ்பிட்டலுக்கு வர்ற ஒவ்வொரு ஆட்களையும் சொல்லிச் சொல்லி ஓட்டு போட வெச்சோம்.. இப்போ போராட்டத்திற்கு போக பஸ் கூட ஏற விடல.. பாத்ரூம் கூட போக விடாம தீவிரவாதி மாதிரி நடத்துறாங்க.." என்று ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.