சென்னை: சென்னை கோயம்பேடு ரோகினி தியேட்டர் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு ஜனநாயகன் படம் பார்க்க சென்றிருந்த ரசிகர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 50-க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த வாகங்களை லாரியில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தினர்.
நடிகரும், முதல்வருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு இன்று உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் "ஒன் லாஸ்ட் டைம்" என சொல்லி ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஜனநாயகன் படம் இன்று ரிலீஸ் ஆகும் என கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் அறிவித்த உடனேயே விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். படம் வெற்றி பெற போஸ்டர்கள், கட் அவுட் அடிக்க ஆரம்பித்தனர். இன்று உலகம் முழுக்க படம் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை கொண்டாடி வருகிறார்கள். நேற்று இரவே தியேட்டர்கள் முன்பு டிஜே வைத்து விஜய் பாடல்களை போட்டு கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் ஷோ என்றாலும் அதிகாலை முதலே தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். பட்டாசு வெடித்தும், விஜய்யின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடினர். தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் முதல் ஷோ முதல் காட்சிக்காகவும் ரசிகர்கள் குவிந்து இதனை கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் பிரபல தியேட்டர் கோயம்பேடு ரோகினியிலும் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஜனநாயகன் ரிலீசை கொண்டாடினர். அதிகாலை முதலே ரசிகர்கள் குவிந்து டிஜே பாடல்களுக்கு ஆடி கொண்டாடினர். முதல் ஷோ மட்டுமின்றி அடுத்தடுத்த ஷோக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் அங்கு குவிந்து இருந்தனர். இதனால் சில ரசிகர்கள் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லையிலும் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். நெல்லை ராம் தியேட்டரில் அமைக்கப்பட்ட கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்களை போலீஸ் அழைத்து சென்றதும் பின்னர் போலீசாரை போக விடாமல் விஜய் ரசிகர்கள் போலீஸ் வாகனத்தை மறித்ததாலும் அங்கு பரபரப்பு உண்டானது. நெல்லை ராம் தியேட்டரில், முதல் நாள் முதல் காட்சிக்காக ஏராளமான ரசிகர்கள் அதிகாலையிலேயே வருகை தந்திருந்தனர். டிஜே இசை, மேளதாளம், பட்டாசு வெடித்தல், ஆட்டம் பாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். அப்போது, கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், கட் -அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சில ரசிகர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து செல்ல விடாமல் ரசிகர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
நெல்லை ராம் தியேட்டரில் போலீசுடன் வாக்குவாதம்