வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி!

  • சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இவர்கள் மூவரும் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. திருச்சி கிழக்குடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும்.

    Advertisement

    இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமிக்கு 27 எம்எல்ஏக்களும், வேலுமணி தரப்புக்கு 17 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு 3 எம்எல்ஏக்கள் என அதிமுக மூன்று பகுதிகளாக பிரிந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.

    2026 சட்டசபைத் தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.

    பிளவின் தொடக்கம்

    2026 சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிளவுபட்டது. முன்னாள் அமைச்சர்கள் பலர் டெபாசிட் இழந்ததற்கு எடப்பாடியே முக்கிய காரணம் என சண்முகம் தரப்பு குற்றம் சாட்டியது.

    Advertisement

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பிளவு

    தமிழ்நாடு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் . அதிலும் அதிமுக கொறடாவை மீறி வாக்களித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

    எடப்பாடி அணியின் நடவடிக்கை

    தவெக-வை ஆதரித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 பேரை அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் மனு அளித்தனர் எடப்பாடி தரப்பினர்.

    Advertisement

    வேலுமணி அணியின் நிலை

    கட்சித் தாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க, வேலுமணி தரப்புக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை; ஆனால் 25 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், சபாநாயகரால் தனி அணியாக அறிவிக்க முடியவில்லை.

    அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

    வேலுமணி அணியிலிருந்து எடப்பாடி அணியில் இணைவு

    சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அந்த அணிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேலுமணி தரப்பைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைதியாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ஆரம்பத்தில் 25 பேராக இருந்த அணியின் பலம் தற்போது 17 ஆகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வேலுமணி அணியின் தற்போதைய நெருக்கடி

    தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான கிளர்ச்சி எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் மீண்டும் இணையலாம் என்ற சாத்தியம் உருவாகியுள்ளது. சபாநாயகரிடம் கொடுத்த புகாரை எடப்பாடி திரும்பப் பெற்றுவிட்டாலே போதும், வேலுமணி குழுவினரின் எம்எல்ஏ பதவிகள் தப்பித்துவிடும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    English Summary

    Tamil Nadu politics witnessed fresh turmoil after AIADMK MLAs Maragatham Kumaravel, Jayakumar, and Sathyabama submitted their resignation letters to Speaker JCD Prabhakaran, triggering widespread political speculation.