சென்னை: அரசியல் பேச்சுகளை தண்டிப்பதற்காக கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அருவருப்பான பேச்சாக இருந்தாலும் அதற்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், போலீசார் அரசுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர மாறிக்கொண்டே இருக்கும் ஆளும் கட்சிக்கு சேவை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னையில் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் சுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என். ரமேஷ் விசாரித்தார்.
அப்போது சுதாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி என். ரமேஷ் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது அரசியல் பேச்சுகளை தண்டிப்பதற்காக கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அருவருப்பான பேச்சாக இருந்தாலும் அதற்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு உண்டு என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களுக்கு மாறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஐடி பிரிவுகளை வைத்துள்ளன. அவற்றின் மூலம் தினந்தோறும் அரசியல், சித்தாந்தம் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் எதிரிகளை வசைபாடுவது அடங்கும் என்ற நீதிபதி, இதுபோன்ற கருத்துகள் தொடர்பாக அனைத்துத் தரப்பிலிருந்தும் புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை அரசுக்கு சேவை செய்கிறதே தவிர, மாறிக்கொண்டே இருக்கும் ஆளும் கட்சிக்கு சேவை செய்யக் கூடாது என்று நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இதற்கு உதாரணமாக, பொருளாதார ஆய்வாளர் கலையரசன் அதிகாலை 5 மணியளவில் சாதாரண உடையில் வந்த போலீசாரால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சாதாரண குடிமகன், அதே தவறான புகாரின் பேரில் அதிகாலையில் கைது செய்யப்பட்டிருந்தால், அந்த கணக்கு அவருடையதா என்று யாராவது கேட்பதற்கு முன்பே, சிறைவாசம், நீதிமன்ற காவல் மற்றும் விசாரணை எனும் நீண்ட பயணத்தை சந்தித்திருப்பார் என்றும் நீதிபதி என்.ரமேஷ் தெரிவித்துள்ளார். போலீசார் யாருக்கும் தெரியாத சாதாரண மக்களை எப்படி நடத்துகிறது என்பத வைத்தே போலீசாரின் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள், எதிர்ப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடுமையான வார்த்தைகளாக இருந்தாலும், அது யாரையும் குற்ற செயலில் ஈடுபடத் தூண்டாத வரை, அவற்றை உடனடியாக பொது அமைதிக்கான அச்சுறுத்தலாக கருத முடியாது என்றும் கூறியுள்ளார். நீதிபதி மேலும், "அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பேச்சுரிமை பாதுகாப்பு என்பது நாகரிகமான பேச்சுகளுக்கு மட்டுமல்ல.. அருவருப்பான பேச்சுகளுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் இதற்காக சம்பந்தப்பட்ட பேச்சை நீதிமன்றம் ஏற்று கொள்கிறது என்று அர்த்தமல்ல. சுதாவின் பேச்சில் பயன்படுத்தப்பட்ட மொழியை நீதிமன்றம் ஆதரிக்கவில்லை. அவரது பேச்சு குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டுமே குறிவைத்ததே தவிர, எந்த சமூகத்துக்கும் எதிரானதாகவோ, வன்முறையை தூண்டுவதாகவோ அமையவில்லை" என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.கைது செய்யக்கூடாது
அரசுக்கு தான்!
அச்சுறுத்தலாக கருத முடியாது
அருவருப்பான பேச்சுகள்