தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர்! விஜய்யுடனும் சந்திப்பு! எடப்பாடிக்கு இரட்டை பேரதிர்ச்சி

  • சென்னை: வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மூவரும் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    Advertisement

    மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அப்போது செங்கோட்டையன் உடனிருந்தார்.

    Advertisement

    இதையடுத்து மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறைக்குச் சென்றனர். அங்கு அவரை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். முதல்வர் விஜய்யையும் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தற்போது 6 மாதங்களுக்குள் இந்த 3 தொகுதிகள்+ திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த தேர்தலில் மேற்கண்ட மூவரும் அவரவர் வென்ற தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, வரலாற்றிலேயே முதன்முறையாக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த படுதோல்வி கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர்கள் பலர் டெபாசிட் இழந்து தோற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) தவறான அரசியல் உத்திகளே காரணம் என மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஓரணியில் திரண்டதால், அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிளவுபட்டது.

    தமிழக சட்டசபையில் அதிர்வு: கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள்
    தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இந்த உள்கட்சிப் பிளவு வெளிச்சத்திற்கு வந்தது.

    Advertisement

    அதிமுக கொறடாவின் (Whip) உத்தரவை அதிரடியாக மீறி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த 22 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    இந்த அதிரடி முடிவால் 47 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, சட்டசபையிலேயே இரண்டாக உடைந்தது.

    எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பாய்ச்சல்

    அரசைக் காப்பாற்ற தவெக-விற்கு ஆதரவளித்த கிளர்ச்சியாளர்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது:

    பதவி பறிப்பு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி குழுவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர்.

    Advertisement

    தகுதி நீக்க முயற்சி: கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் எடப்பாடி தரப்பு முறைப்படி மனு அளித்தது.

    வேலுமணி அணியின் சட்டப் போராட்டமும் தற்போதைய நெருக்கடியும்

    சட்டசபையில் எடப்பாடிக்கு மாற்றாக, அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தோடு தற்காலிக சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

    சட்டச் சிக்கல்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேலுமணி அணிக்கு மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கு (அதாவது 32 எம்.எல்.ஏ-க்கள்) ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் 25 பேர் மட்டுமே ஆதரவளித்ததால், சபாநாயகரால் இவர்களைத் தனி அணியாக அங்கீகரிக்க முடியவில்லை.

    Advertisement

    அமைச்சரவை ஏமாற்றமும் அணி மாற்றமும்

    தவெகவின் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், தங்களுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் எவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த ஏமாற்றத்தால் அதிருப்தி அடைந்த வேலுமணி தரப்பைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள், மீண்டும் சத்தமில்லாமல் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ளனர். இதனால் வேலுமணி அணியின் பலம் 25-லிருந்து 17 ஆகக் குறைந்து, அந்த அணி பலவீனமடைந்துள்ளது.

    தற்போதைய அரசியல் சூழல்: சமரசப் பேச்சுவார்த்தை?
    தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததாலும், எம்.எல்.ஏ பதவி பறிபோகும் அச்சம் இருப்பதாலும், வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி அணியோடு இணைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்களுக்கு எதிராக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட தகுதி நீக்கப் புகாரை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றால், தங்களின் எம்.எல்.ஏ பதவி தப்பித்துவிடும் என்பதால், இரு தரப்பிற்கும் இடையே தற்போது ரகசிய சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இவர்கள் மூவரும் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. திருச்சி கிழக்குடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும். ராஜினாமா செய்த மூன்று பேரும் தவெகவில் இணைந்தனர். அங்கேயே மூவருக்கும் கட்சி உறுப்பினர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவர்கள் மூவரும் சேர்ந்து முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக விஜய் மாற்றிவிட்டதாக பலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    Topics: #tvk party

    English Summary

    In a major political development, three AIADMK MLAs aligned with the Velumani camp resigned from their Assembly posts and later met Minister Aadhav Arjuna in person before officially joining Tamilaga Vettri Kazhagam, creating a stir in Tamil Nadu politics.