சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏடிஎம் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன.. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை மட்டும் எடுத்துச் செல்லவில்லை.. ரூ.12.54 லட்சம் பணம் இருந்த ஏடிஎம் மெஷினையே பெயர்த்து தூக்கி சென்று விட்டார்கள்.. ஆனால், கொள்ளையடித்த ஏடிஎம் மெஷினை எடுத்துச் சென்ற விதமும், பின்னர் அதனை உடைத்து பணத்தை எடுத்துவிட்டு வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்ற விதமும் போலீஸாரையே அதிர வைத்துள்ளது.
பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஹிட்டாச்சி தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 5-ம் தேதி காலை வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றபோது, அங்கு ஏடிஎம் மெஷினே இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பேங்க் மேனேஜர், மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிறகு ஆவடி காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம், பூந்தமல்லி உதவி ஆணையர் அமீர் அகமது உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரணையை தொடங்கினார்கள். முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் மெஷினில் ரூ.12,54,700 வரை பணம் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததுடன், ஏடிஎம் மையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனவே, கொள்ளையர்கள் எந்த வாகனத்தில் தப்பிச் சென்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி மார்க்கத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீஸாருக்கு முக்கியமான துப்பு கிடைத்தது. சம்பவத்தன்று 6 பேர் கொண்ட கும்பல், கவ்பார் இரும்புக் கம்பியின் உதவியுடன் ஏடிஎம் மெஷினை பெயர்த்து, அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்றது சிசிடிவி ஒன்றில் பதிவாகியிருந்துது. அரண்வாயல் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் அமரர் ஊர்தியை நிறுத்திய அந்த கும்பல், ஏடிஎம் மெஷினை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டது. அதன்பிறகு ஏடிஎம் மெஷினை எடுத்துவர பயன்படுத்திய அமரர் ஊர்தியையும் அங்கேயே விட்டுவிட்டு, 3 பைக்குகளில் 6 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்தபோது, கிருஷ்ணா கால்வாயில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே ஏடிஎம் மெஷினின் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள், ஸ்ரீபெருமந்தூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்டலம் பகுதியில் அமரர் ஊர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததும் போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. அந்த வாகனத்தில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த உமாபதிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையோரத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த அமரர் ஊர்தியை திருடித்தான் கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இப்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனத்தின் தடத்தை வைத்து கொள்ளையர்களின் நகர்வுகளை போலீஸார் நெருங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அந்த கொள்ளையர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால், கடந்த 10 நாட்களில் சென்னை சுற்றுவட்டாரத்தில் நடந்த 4-வது ஏடிஎம் கொள்ளை என்பதால், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஒரே கும்பல் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது....!!பூந்தமல்லி ஹிட்டாச்சி வங்கி ஏடிஎம்
100 சிசிடிவி காட்சிகள்
அமரர் ஊர்தி துப்பு
திருவள்ளூர் போலீஸ்