சென்னை: வெங்காயத்தின் தரம் சரியாக இல்லாததால் மக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக வாங்கப்பட்ட வெங்காய கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அழுகிய வெங்காயம் சென்னை வந்து சேர்ந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து, வெங்காய கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தைக் குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், NAFED நிறுவனத்திடம் இருந்து கிலோ 29 விலையில் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழக அரசு அக்டோபர் மாதம் ஆணை வழங்கி இருந்தது. அதன்படி, நாசிக்கில் இருந்து வெங்காய லோடு சென்னை வந்தது. கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை அக்டோபர் 31 ஆம் தேதி கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. அத்துடன், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. மகாராஷ்டிரத்தில் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படவிருந்த நிலையில், வெங்காயத்தின் தரத்தில் குறை இருந்ததாகக் கூறி கொள்முதல் ஆணையை தமிழக அரசு ரத்து செய்தது. இதனிடையே, வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து விவகாரம் தொடர்பாக தவெக அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில், ஆணை ரத்து குறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCC) ஆணை வழங்கியிருந்தது. மகாராஷ்டித்தில் உள்ள நாசிக்கிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யச் சென்றபோது, தமிழ்நாட்டுக்கு வெங்காயம் ஒரு நாள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்தபோது. 'ஏ' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை, அக். 31 கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அப்போது மூட்டைகளில் 50.2 சதவிகித வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ அளவை விட குறைவாகவும், 20 முதல் 26 சதவிகிதம் வரை அழுகியதோடு, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. பொருளின் தரம் சரியாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெங்காயத்தின் தரம் குறைவாக இருந்ததால் பொதுமக்களின் நலன்கருதி கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொள்முதல் ஆணை அக்டோபர் 31-ல் ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.