பேச்சு மூச்சில்லாமல் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட பாக்யராஜின் உடல்! வெடித்து அழுத பூர்ணிமா

  • சென்னை: பாக்யராஜின் உடலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்த போது அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் உடைந்து அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

    Advertisement

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ளது பாக்யராஜின் வீடு. இவருக்கு வயது 73 ஆகிறது. பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் தினந்தோறும் வாக்கிங் சென்றுவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.

    Advertisement

    அந்த வகையில் இன்றைய தினமும் இருவரும் வாக்கிங் சென்றனராம். பிறகு வீட்டிற்கு வந்த பாக்யராஜ், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக பூர்ணிமாவிடம் தெரிவித்தாராம். உடனே அவர் காரை எடுத்துக் கொண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதாவது வாக்கிங் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் தெரிந்ததுமே பாக்யராஜின் வீட்டிற்கு ஏராளமானோர் கூடினர். அதில் முதல் ஆளாக பார்த்திபன் வந்திருந்தார். பாண்டியராஜன், சாந்தனுவின் மாமியார், மாமனார் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

    Advertisement

    இதையடுத்து பாக்யராஜின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வீட்டிற்கு வந்தது. அப்போது ராதிகா அழுதபடியே இறங்கி வந்தார். அவரது பின்னால் பாக்யராஜ் மகன் சாந்தனு வந்திருந்தார்.

    சாந்தனுவை உள்ளே அழைத்து சென்றதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவரை உள்ளே அழைத்துச் சென்ற போது கூட தனது தந்தையின் பூதஉடல் வருவதை திரும்பி திரும்பி பார்த்தார்.

    இதையடுத்து அவரை தேற்றி அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து மற்றொரு காரில் பூர்ணிமா பாக்யராஜ் வந்தார். அவர் அழுகை தாளாமல் வெடித்து அழுத காட்சி அங்கிருந்தோரை கலங்கச் செய்தது. அதிலும் எப்படியும் சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு நல்லபடியாக வருவார் என எண்ணியிருந்த நிலையில் பாக்யராஜை மூச்சு பேச்சு இல்லாமல் வெறும் உடலாக அழைத்து சென்றதை அவரது மனம் தாங்கவில்லை.

    Advertisement

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரையும் தேற்றி அழைத்துச் சென்றனர். பாக்யராஜின் உடல் நாளை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

    திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

    Advertisement

    தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

    அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    Advertisement

    திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Emotional scenes unfolded as actor-director Bhagyaraj’s body was brought from Chennai Apollo Hospital to his residence at Valluvar Kottam, where his wife Poornima Bhagyaraj was seen in tears.