சென்னை: குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஆகச்சிறந்த, பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வு அஞ்சலகத்தின் நிலையான வைப்புத்தொகை (Post Office Time Deposit) திட்டமாகும். இந்த திட்டத்தின் நன்மைகள், சாதகங்கள் என்னென்ன? வட்டி, வரி விகிதங்கள் எப்படி? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நிலையான வைப்புத்தொகை திட்டமானது, அரசு துறையின் கீழ் செயல்படுவதால் இதில் நஷ்டம் ஏற்படுவதற்கு கொஞ்சமும் வாய்ப்பு கிடையாது.. குறிப்பாக இல்லத்தரசிகளான தங்களின் மனைவியின் பெயரில் இந்த முதலீட்டை செய்யும்போது, எமர்ஜென்சி நேரத்தில் குடும்பத்திற்கு கைகொடுத்து உதவும்..
இப்போதுள்ள ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததால் பல பெரிய வங்கிகள் தங்களின் எஃப்டி வட்டி விகிதங்களை அடுத்தடுத்து குறைத்து வருகின்றன. ஆனால், நம்ம போஸ்ட் ஆபீஸில் இருக்கும் டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி மட்டும் இன்னும் குறையாமல் அப்படியே கெத்தாக நீடிக்கிறது. வங்கிகளில் உள்ள திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் இடையே மாறுபடும்.. ஆனாலும் தபால் நிலையத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் நாடு முழுவதும் ஒரே சீராகவும் நிலையானதாகவும் இருக்கும். அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக இந்திய அரசால் நடத்தப்பட்டு, முழு உத்திரவாதம் அளிக்கப்படுபவை என்பதால் இதில் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாப்பானது. இதில் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சந்தை அபாயங்கள் எதுவுமில்லாமல் நிலையான வருமானம் பெற இது சிறந்த வழியாகும். அதுமட்டுமல்ல, அவசர காலங்களில் முதலீடு செய்த பணத்தை எடுக்க விரும்பாதவர்கள், இந்த டெபாசிட் பத்திரத்தை பிணையாக வைத்து போஸ்ட் ஆபீசிலேயே கடனாக பெற்றுக் கொள்ளும் கடன் வசதியும் இதில் உள்ளது. மெச்சூரிட்டி முடிந்தவுடன், விரும்பினால் அதே கணக்கை இன்னும் சில வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு. இந்த திட்டத்தில் வட்டி கணக்கீடானது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு, வருடத்தின் இறுதியில் நேரடியாக உங்களின் கணக்கில் சேர்ந்துவிடும். இப்போது அஞ்சலகத்தில் 1 வருடத்திற்கு 6.9%, 2 வருடத்திற்கு 7.0%, 3 வருடத்திற்கு 7.1% மற்றும் 5 வருட திட்டத்திற்கு மிக அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்களின் அடிப்படையில், உங்கள் மனைவியின் பெயரில் 2,00,000 ரூபாய் அசல் தொகையை முதலீடு செய்தால் 1 வருட முடிவில் 14,245 ரூபாய் வட்டியுடன் மொத்தம் 2,14,245 ரூபாயும், 2 வருட முடிவில் 29,777 ரூபாய் வட்டியுடன் மொத்தம் 2,29,777 ரூபாயும் கைக்கு வரும். இதுவே 3 வருட திட்டத்தில் 46,310 ரூபாய் வட்டியுடன் மொத்தம் 2,46,310 ரூபாயும், 5 வருட நீண்ட கால திட்டத்தில் 89,990 ரூபாய் வட்டி லாபத்துடன் மொத்தம் 2,89,990 ரூபாயும் உங்கள் மனைவியின் கணக்கிற்கு வந்து சேரும். அஞ்சலகத்தில் 5 வருட கால டைம் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். 1 வருடம், 2 வருடம் மற்றும் 3 வருட திட்டங்களுக்கு இந்த வரிச் சலுகை கிடையாது. அவசர தேவைக்காக பணத்தை எடுக்க விரும்பினால், கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் பணத்தை எடுக்க முடியாது. 6 மாதங்களுக்குப் பிறகு கணக்கை முடித்தால், சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும். ஒரு வருடம் முடிந்து நீங்கள் கணக்கை முன்கூட்டியே முடித்தால், உங்களுக்கான வட்டி விகிதத்தில் 2% வட்டி குறைக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்பினால், அருகிலுள்ள எந்தவொரு தபால் நிலையத்திற்கும் நேரடியாக சென்று இதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து நீங்கள் கணக்கை தொடங்கலாம். இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போதுமானது. பணத்தை நீங்கள் ரொக்கமாகவும் அல்லது செக் மூலமாகவும் தாராளமாக டெபாசிட் செய்யலாம்.திட்டத்தின் நன்மைகள் & சாதகங்கள்
வட்டி விகிதங்கள் பாருங்க
வரி நன்மைகள் மற்றும் விதிகள்