தபால் கட்டணம் உயர்கிறது! ராக்கி கவருக்கு மட்டும் கம்மி ரேட்.. ஸ்பீட் போஸ்ட் கட்டணம் எவ்வளவு தெரியுமா

  • சென்னை: இந்திய தபால் துறை தன்னுடைய கஸ்டமர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விரைவு தபால் சேவையில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும் விநியோகத்தை வேகப்படுத்தவும் இந்த முடிவை தபால் துறை எடுத்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    தபால் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக "ஆவணம்" மற்றும் "பார்சல்" போன்றவற்றுக்கு தெளிவான புதிய வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மறுவிற்பனை செய்ய முடியாத, வணிக மதிப்பு இல்லாத கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட தபால்கள் அனைத்துமே "ஆவணம்" என்ற பிரிவில் சேரும்.

    Advertisement

    தபால் துறை அறிவிப்பு

    வங்கி பாஸ்புக், காசோலை புத்தகம், கணக்கு அறிக்கை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், புதிய வாடிக்கையாளர் வரவேற்பு பெட்டகங்கள் போன்றவையும் இந்த ஆவணப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

    அதேபோல அரசு சான்றிதழ்களான ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்றவையும் ஆவணங்களாகவே கருதப்படும். பண்டிகையை முன்னிட்டு 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி கவர்கள், வாழ்த்து அட்டைகள், வணிக நோக்கமற்ற அச்சிடப்பட்ட பொருட்களும் இதே பிரிவில் சேர்க்கப்பட்டு குறைந்த கட்டணச் சலுகை பெறுகின்றன.

    Advertisement

    விரைவு தபால் கட்டணம்

    மற்றபடி, வணிக ரீதியான விற்பனைப் பொருட்கள் அனைத்துமே பார்சல் பிரிவுக்குள் சென்றுவிடும். இப்போது, "24 விரைவு தபால்" மற்றும் "48 விரைவு தபால்" என்ற அதிவேக சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 பெருநகரங்களில் மட்டுமே இந்த சேவை முதற்கட்டமாக செயல்படும்.

    ஆனால், பொதுமக்களுக்கு வழக்கம்போல் அனுப்பப்படும் சாதாரண விரைவு தபால் கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை.. அதேபோல 24 மணி நேர விரைவு சேவைக்கு பொருளின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து 38 ரூபாய் முதல் 186 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராமிற்கும் குறைவான தபால்களுக்கு உள்ளூரில் 38 ரூபாயும், நாட்டின் பிற பகுதிகளுக்கு 94 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    Advertisement

    பார்சல், ஆவணம்

    51 முதல் 250 கிராம் வரை 118 ரூபாய் முதல் 154 ரூபாய் வரையிலும், 251 முதல் 500 கிராம் வரை 140 ரூபாய் முதல் 186 ரூபாய் வரையிலும் கட்டணம் இருக்கும். இதற்கு ஜி.எஸ்.டி தனியாகச் சேரும். 48 மணி நேர சேவைக்கான கட்டணம் 61 ரூபாய் முதல் 121 ரூபாய் வரை இருக்கும்.

    வர்த்தக ரீதியாக தபால் அனுப்பும் மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவைக்கு 38 முதல் 100 ரூபாயும், 48 மணி நேர சேவைக்கு 48 முதல் 72 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களையும் பொருட்களையும் தனித்தனியாகப் பிரித்து விரைவாகச் சேர்ப்பதே இந்த புதிய மாற்றத்தின் முதன்மை நோக்கம் என்று தபால் துறை தெளிவுபடுத்தியுள்ளது...!!!

    English Summary

    Postal Charges Hike: Special Discount for Rakhi Envelopes... Do You Know the New Speed Post Rates From August 1?