விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டு.. குடும்பமாக மக்கள் போராடும் நிலை.. உதயநிதி அட்டாக்!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியிலேயே மின் வெட்டு காரணமாக மக்கள் குடும்பம் குடும்பமாக சாலையில் போராடுகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் எழுப்பப்பட்ட 16 கேள்விகளில் ஒன்றுக்கு கூட விஜய் பதில் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    திமுகவின் முப்பெரும் விழாவில் ஸ்டாலின், தவெக ஆட்சியில் ரெண்டு ரெண்டுக்கு நடுவுல தான் போட்டியே.. ஒன்று அரிவாள் வெட்டு.. மற்றொன்று மின்வெட்டு என்று பேசி இருந்தார். இந்த வசனம் திமுகவினர் மட்டுமல்லாமல் சாமானிய மக்கள் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது. கடந்த 4 மாதமாக அதிகளவில் மின் வெட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் அதிகரித்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சர்க்கஸ் கும்பலிடம் தமிழ்நாடு மாட்டி கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 8 படுகொலை நடந்திருக்கிறது. திமுக தலைவர் சொன்னது போல் மின் வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையில் தான் போட்டி..

    முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டு காரணமாக மக்கள் குடும்பத்துடன் சாலையில் போராடி வருகின்றனர். ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகிவிட்டது. இதுவரை ஒரு திட்டத்தை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுகவின் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி இருக்கின்றனர். சட்டசபையில் எதிர்க்கட்சி கேள்வி கேட்டால், ஆளுங்கட்சி பதில் சொல்வார்கள்.

    Advertisement

    ஆனால் இன்று கேள்வி கேட்டால், பாட்டு பாடுகிறார்கள். சில நேரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இன்னும் டான்ஸ் மட்டும் தான் ஆடவில்லை. முதல்வர் வாயை திறக்கவில்லை. வாயை திறந்தாலும் வெறும் பஞ்ச் டயலாக் தான். அதுவும் எங்களை பார்த்து பேசுவது கிடையாது. கேமராவை பார்த்து, ஆங்கிள் சரியாக இருக்கிறதா என்று சபாநாயரிடம் அனுமதி கேட்டு பேசுகிறார்.

    சட்டசபையில் 16 நாள் கேள்விகளை கேட்டேன். அதில் ஒரு கேள்விக்கு கூட முறையாக பதில் சொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த மிசா, சர்க்காரியா கமிஷன் என்று பேசி கொண்டிருக்கிறார். அதேபோல் என்னுடைய டேபிளில் 3 ஃபைல் இருக்கிறது என்றார். அந்த ஃபைலை உடனடியாக திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா என்று கேட்டோம். இதுவரை முறையாக பதில் வரவில்லை.

    Advertisement

    தவெகவினர் இன்னும் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதை நம்பவில்லை. எதற்கெடுத்தாலும் திமுக ஆட்சியில் நடந்ததை பேசுகிறார்கள். ஆட்சி அமைக்க 117 சட்டசபை உறுப்பினர்கள் தேவை.. அவர்களுக்கு 107 இடங்கள் மட்டுமே கிடைத்தது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவில் தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Power Cuts in CM Vijay Own Perambur Constituency Forcing Families onto Streets says Udhayanidhi Stalin