ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!

  • சென்னை: தமிழகத்தில் தொடர் வெயிலின் தாக்கத்துக்கு இணையாக நள்ளிரவு மின்வெட்டு பொதுமக்களின் பொறுமையை சோதித்து வருகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினசரி 6 முதல் 7 மணி நேரம் வரை நீடிக்கும் மின்தடை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீதிகளில் இறங்கி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்தக் காட்சிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் எக்ஸ் தளங்களில் காட்டுத்தீ போல் பரவி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
    குறிப்பாக சென்னையின் தென் புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், முத்துக்காடு, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    Advertisement

    உப்பளம் போன்ற வெப்பமான வானிலையில் தூக்கமின்றி தவிக்கும் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ECR மற்றும் OMR சாலைகளில் மக்கள் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல் அம்பத்தூர், பெரம்பூர், பொன்னேரி, சீர்காழி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் தீப்பந்தங்களுடன் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டங்களின் நேரடி வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன. "மின்சாரம் இல்லை, தூக்கம் இல்லை; இதுதான் மக்கள் ஆட்சியா?" எனும் கேப்ஷன்களுடன் பகிரப்படும் ரீல்ஸ்கள் TVK அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.

    Advertisement

    குறிப்பாக, காஞ்சிபுரம் அருகே நாரப்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் பேசிக்கொண்டு இருக்கும் போதே மின்வெட்டு ஏற்பட்ட வீடியோ ரீல்ஸ் செம வைரலாகி வருகிறது. அமைச்சரின் பொறுப்பற்ற செயலுக்கு எதிராக நெட்டிசன்கள் மீம்கள் மற்றும் கடுமையான விமர்சன ரீல்களை வெளியிட்டு TVK அரசை விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சென்னை திரு.வி.க. நகர் தொகுதி TVK எம்.எல்.ஏ எம்.ஆர். பல்லவி, "திமுகவினர் திட்டமிட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தி TVK அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். இந்தக் கருத்து ரீல்ஸ் வடிவில் வைரலானதைத் தொடர்ந்து திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், எம்.எல்.ஏ பல்லவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோரவும், வீடியோக்களை நீக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    மின்வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். "தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை. சென்னை ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி கேபிள் பழுது மற்றும் மர்ம நபர்கள் பில்லர் பாக்ஸ்களை உடைத்து HRC பியூஸ்களைத் திருடுவதே மின்வெட்டுக்கு காரணம்" என்று தெரிவித்தனர்.

    எனினும், காரணம் எதுவாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் மக்களின் கோபம் TVK அரசுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. அரசியல் விமர்சகர்கள், இந்த எதிர்ப்பு அலை வரவிருக்கும் நாட்களில் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என்று கருதுகின்றனர். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினை அரசியல், சமூகம் மற்றும் டிஜிட்டல் உலகம் என மூன்று தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    English Summary

    Power Cuts Spark Midnight Protests in Tamil Nadu : Viral Reels Target TVK Government Heavily