பவர் ஆஃப் அட்டார்னி மூலம் சொத்து பதிவு.. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு சலுகை.. யாருக்கெல்லாம் கிடையாது

  • சென்னை: வெளிநாட்டில் இருந்தபடியே தமிழ்நாட்டில் சொத்து பதிவு செய்யும் பலருக்கு ஒரு முக்கியமான சிக்கலுக்கு இப்போது சூப்பர் தீர்வு வந்துள்ளது.. பவர் ஆஃப் அட்டார்னி மூலம் சொத்து பதிவு செய்யும்போது, அதை கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் "உயிர் வாழ் சான்றிதழை" சமர்ப்பிக்க 30 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், அந்த அவகாசம் இப்போது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த 60 நாள் சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

    Advertisement

    நீங்கள் வெளிநாட்டில் வசிக்கிறீர்களா? தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் சொத்தை விற்க வேண்டும்.. அல்லது வேறு பத்திரப்பதிவு வேலை இருக்கிறது. ஆனால் அதற்காக ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வர முடியாத நிலைமை வந்துவிட்டால் என்ன செய்வது?

    Advertisement

    இதுபோன்ற நேரத்தில், இங்கேயுள்ள சொந்தக்காரர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்து, அவரை வைத்து சொத்து தொடர்பான வேலைகளை செய்து கொள்வார்கள்..

    அப்படி பவர் கொடுத்தவர் சார்பாக வேறொருவர் சொத்து பத்திரத்தை பதிவு செய்யும்போது, ஒரு முக்கியமான சான்றிதழை கொடுக்க வேண்டும். அதுதான் "உயிர் வாழ் சான்றிதழ்".. அதாவது, பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் இதுவாகும்.

    உயிர் வாழ் சான்றிதழ் அவசியம்

    வெளிநாட்டிலுள்ள அந்த நபர், தான் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகம், அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் முன்னிலையில் இந்த சான்றிதழைப் பெற்று சான்றொப்பம் பெற வேண்டும்... பிறகு அதை இந்தியாவில் இருக்கும் பவர் ஆஃப் அட்டார்னி முகவருக்கோ, சம்பந்தப்பட்ட நபருக்கோ போஸ்டலிலோ அல்லது கூரியரிலோ அனுப்ப வேண்டும்... அவர் அதை பத்திரப்பதிவு நேரத்தில் சார்பதிவாளர் ஆபீசில் கொடுக்க வேண்டும். இதுதான் நடைமுறையாகும்.

    Advertisement

    ஆனால், இங்குதான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.. தூதரகத்தில் டைம் வாங்க வேண்டும், அங்கே சென்று சான்றிதழ் பெற வேண்டும், சான்றொப்பம் வாங்க வேண்டும். அதன்பிறகு அந்த ஆவணம் இந்தியாவுக்கு வந்து சேர வேண்டும். இதற்கெல்லாம் கண்டிப்பாக சிறிது நாட்களாவது ஆகிவிடும்.. ஆனால், உயிர் வாழ் சான்றிதழை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், சிலரால் அந்த காலத்துக்குள் ஆவணத்தை கொடுக்க முடியாமல் போகும் நிலைமை உள்ளது

    பவர் ஆஃப் அட்டார்னி

    தூதரகத்தில் நேரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ, தபால் அல்லது கூரியரில் ஆவணம் வந்து சேர தாமதமானாலோ பத்திரப்பதிவு வேலையும் பாதிக்கப்பட்டுவிடுகிறது.. அதனால்தான் இதுதொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.. எப்படியாவது இந்த சிக்கலுக்கு தீர்வு வேண்டும் என்றும், பதிவுத்துறை இந்த கால அவகாசத்தை அதிகமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    Advertisement

    அதன்படியே, வெளிநாட்டில் இருந்து முறையாக வழங்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் சொத்து பத்திரப்பதிவு செய்யும்போது, உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க 60 நாட்கள் வரை தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் பிறப்பித்துள்ளார்.

    கால அவகாசம் நீட்டிப்பு

    இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "பொது அதிகார ஆவணத்தின் (Power of Attorney) அடிப்படையில் முகவர் மூலம் சொத்துகளைப் பதிவு செய்யும்போது, அதிகாரம் அளித்தவர் உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான சான்று (Life Certificate) தாக்கல் செய்வது கட்டாயம். இந்த சான்று ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் தேதிக்கு அதிகபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும் என்பது இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    Advertisement

    ஆனால், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் அல்லது நோட்டரி வழக்கறிஞரிடம் நேரம் ஒதுக்கி இந்த சான்றைப் பெற்று, அதை தபால் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்குள் 30 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ஆவணங்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    சலுகை யாருக்கு பொருந்தும்

    இதையேற்று சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டில் இருந்து எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகாரத்தை பயன்படுத்திப் பதிவுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டும் இந்தச் சலுகை பொருந்தும். இத்தகைய ஆவணங்களுக்கு, பொது அதிகாரம் வழங்கியவர் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதிக்கு முன் 60 நாட்களுக்குள் வழங்கப்பட்டிருந்தால் போதுமானது.

    Advertisement

    இந்த சலுகை உள்ளூரில் வழங்கப்படும் மற்ற அதிகார ஆவணங்களுக்கு இது பொருந்தாது. இந்த புதிய அறிவுறுத்தல்களை எவ்வித தவறுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது மாவட்டப் பதிவாளர்கள் இதை சரியாகக் கண்காணிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    யாருக்கெல்லாம் கிடையாது

    இந்த உத்தரவுதான் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.. இந்த 60 நாள் சலுகை எல்லா பவர் ஆஃப் அட்டார்னி ஆவணங்களுக்கும் கிடையாது. வெளிநாட்டில் இருந்து முறையாக வழங்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பத்திரப்பதிவு நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்பட்ட பிற பவர் ஆஃப் அட்டார்னி ஆவணங்களுக்கு பழைய நடைமுறையே தொடரும்.

    பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வது ஏன் இவ்வளவு முக்கியம் என்ற கேள்வியும் வருகிறது.

    அசையா சொத்து பதிவு

    ஒருவர் பெயரில் இன்னொருவர் சொத்து பதிவு செய்வதால், பவர் கொடுத்தவர் உண்மையில் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வது அவசியம். ஆள்மாறாட்டம் மற்றும் சொத்து பதிவு முறைகேடுகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் உயிர் வாழ் சான்றிதழும் ஒன்றாக உள்ளது. பவர் ஆஃப் அட்டார்னி மூலம் அசையா சொத்து பதிவு செய்வதில் இந்த சான்றிதழ் சரிபார்க்கப்படுவது குறித்து நீதிமன்ற பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, வெளிநாட்டில் இருந்து பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்து தமிழ்நாட்டில் சொத்து பதிவு செய்ய இருப்பவர்கள், உயிர் வாழ் சான்றிதழ் எப்போது பெறப்பட்டது, தூதரகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி மூலம் முறையாக சான்றொப்பம் பெறப்பட்டுள்ளதா, 60 நாள் காலவரம்புக்குள் அதை சமர்ப்பிக்கிறோமா என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்...!!!

    English Summary

    Power of Attorney Property Registration benefits.. Big benefits for NRIs.. But Who Is Not Eligible?