தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை.. நிலைமை மோசமடைந்திருக்கிறது.. அன்புமணி ராமதாஸ்

  • சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அறைகள் இருளில் மூழ்கியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தலைமைச் செயலகம் வரை பாதித்துள்ள மின்தடை விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக மின்வெட்டு மாறியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் சில இடங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குழந்தைகளும் முதியோரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

    Advertisement

    மின்வெட்டிற்கு மிக முக்கியமான காரணம் மின்சாரப் பற்றாக்குறையே ஆகும். எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக வெயிலின் தாக்கம் குறையாமல் கோடைக்காலம் போல் அக்டோபர் வரை நீடிக்கிறது. இதனால் வீடுகளில் மின்சார நுகர்வு அதிகமாக உள்ளது. மறுபக்கம், நீர்மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றால் போதிய தண்ணீர் இல்லை; கடுமையான தட்பவெப்பநிலை மாற்றத்தால் காற்றாலை மின்சாரமும் கைகொடுக்கவில்லை. இதனால், மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் (Peak Hours) அரசு வெளிச்சந்தையிலிருந்தே மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சமாளித்து வருகிறது.

    கோவையில் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை இன்ஸ்டாவில் போட்ட கணவன்? ஸ்டேஷனில் தர்ம அடி
    Advertisement

    வெளிச்சந்தையில் வாங்கப்படும் மின்சாரத்தின் விலை மிக அதிகமாகும். சில நேரங்களில் ஒரு யூனிட் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. இரவு நேரங்களில்தான் மின்சாரம் அதிகமாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக, இரவு 7 மணி முதல் 12 மணி வரை மின்சாரத்தின் தேவை உச்சபட்சமாக இருக்கிறது. இந்த நேரங்களில்தான் மின்தடையும் அதிகளவில் ஏற்படுகிறது.

    எங்கு அதிகமாக மின்சார நுகர்வு ஏற்படுகிறதோ, அங்கு மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு, நிலைமை சீரடைந்ததும் மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது. பொதுவாக இரவில்தான் இப்படி ஏற்படுகிறது என்றாலும், சில நேரங்களில் பகலிலும் மின்சாரம் தடைபடுகிறது. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் கூட மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில், தற்போது தலைமைச் செயலகத்திலேயே மின்சாரம் தடைபட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின்தடை காரணமாக அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு, தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

    முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்குத் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின்தடை, இப்போது தலைமைச் செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.

    Advertisement

    தமிழ்நாட்டின் மின்தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுவதுதான் மின்வெட்டுக்குக் காரணம். இதைச் சமாளிக்க முதலில் 2,000 மெகாவாட்டும், பின்னர் 4,500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின்வெட்டும் மின்தடையும் தொடர்வது ஏன்?

    மின்வெட்டு அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது. எனவே, தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்குத் தீர்வு காணப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English Summary

    Reports indicate that the offices of Ministers Sengottaiyan and Aadav Arjuna were plunged into darkness following a power outage at the Chennai Secretariat. Commenting on the incident, PMK leader Anbumani Ramadoss urged that the power supply issue—which affected even the Secretariat—be resolved on a war footing.