சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் ''நடிகர் பிரகாஷ் ராஜ் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டால் பல திரைப்பட வாய்ப்புகளை அவர் இழந்துள்ளார். அட்வான்ஸ் கொடுத்த பிறகு கூட அவர் வேண்டாம் என்று பணத்தை திரும்ப பெறுகின்றனர்'' என்று அவரது மனைவி போனி வர்மா கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். எக்ஸ் பதிவுகளில 'ஜஸ்ட் ஆஸ்க்கிங்' என்ற ஹேஷ்டேக்கில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார். சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் பங்கேற்றார்.
தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடக்கும் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இன்று டெல்லியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் நடக்குமு் பேரணியிலும் பிரகாஷ் ராஜ் பங்கேற்கிறார். இந்நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா 'பிரேமா தி ஜர்னலிஸ்ட்' என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ''பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டபோது பிரகாஷ் ராஜ் நொறுங்கிவிட்டார். அந்த மரணம் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. எவ்வளவு காலம் பயத்தில் வாழ வேண்டும் என்று கேட்டார். பிரகாஷ் ராஜ்க்கு பயம் கிடையாது. நடிகராக தெலுங்கு மொழியில் அவர் பலமுறை தடை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. சரி என நம்பும் விஷயங்களை அவர் 100 சதவீதம் உறுதியுடன் செய்வார். திரையுலகில் உள்ள எனது மிக நெருங்கிய நண்பர்கள் பிரகாஷ் ராஜ் உடன் நட்பாக இல்லை. இதற்கு அவர் முன்வைக்கும் கருத்துகள் காரணமாக இருக்கலாம். பிரகாஷ் ராஜ் தனது அரசியல் நிலைப்பாடுகளால் பல திரைப்பட வாய்ப்புகளையும், விளம்பர ஒப்பந்தங்களையும் இழந்துள்ளார். பல படங்களில், முன்பணம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் திரும்ப பெற்று கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிரான டெல்லி போராட்டத்தில் மாணவர்களுடன் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அங்கு நடந்த தடியடி மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். தனியே ஹோட்டல் அறை எடுத்து தங்கும்படி கூறினேன். ஆனா் வர், 'இங்கே பிள்ளைகள் போராடி கொண்டிருக்கிறார்கள். எனக்கு 60 வயது ஆகிறது. ஆனால், இந்த பிள்ளைகளைப் பாரு.. அவர்களின் தாய்மார்களின் நிலை என்ன? குறைந்தபட்சம், பிரகாஷ் ராஜ் தங்கள் பிள்ளைகளுடன் அமர்ந்திருக்கிறார் என்று அந்த தாய்மார்கள் நிம்மதி அடையலாம் அல்லவா? என்று பேராட்டக்களத்திலேயே இருந்தார்'' என்றார். நடிகர் பிரகாஷ் ராஜ் முதலில் நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 1994ம் ஆண்டு நடந்தது. இந்த தம்பதிக்கு மேக்னா, பூஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். சித்து என்ற மகன் 2004ம் ஆண்டில் இறந்தார். பிரகாஷ் ராஜ் - லலிதா குமார் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் 2009ம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு பிரகாஷ் ராஜ், நடன இயக்குநர் போனி வர்மாவை கடந்த 2010ம் ஆண்டில் 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2016ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் வேதாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.வீரமணி புழலில் ரகசியம்.. தொழிலதிபர் பிரகாஷ் சிக்கியது எப்படி? 3 வங்கி கணக்கில் ரூ. 24 கோடி முடக்கம்