'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்!

  • சென்னை: தமிழ்நாட்டில் ராஜ்ய சபா இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடக்கவுள்ளது. சிவி சண்முகம் ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இம்முறை தவெக ஆதரிக்கும் வேட்பாளரே ராஜ்ய சபா தேர்தலில் வெல்ல முடியும். இதனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் தவெக ராஜ்ய சபா சீட் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது.

    Advertisement

    இதனை ஏற்று தவெக சார்பாக முதல்வர் விஜய் ராஜ்ய சபா காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இதன்பின் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இதன்பின் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை வந்தார். அப்போது பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதினார்.

    Advertisement

    அதில் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டார். தவெக உடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட எந்தக் கட்சியும் அறிவிக்கவில்லை.

    Advertisement

    அதேபோல் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்றும் இதுவரை தவெக தவிர்த்து வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதனால் பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு சர்ச்சையானது. இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

    கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். அதேபோல் சிபிஐ கட்சியின் பதிலடி கொடுத்தது.

    Advertisement

    இந்த நிலையில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளின் அலுவலகங்களுக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று பிரவீன் சக்கரவர்த்தி ஆதரவு கோரினார். அப்போது செய்தியாளர்கள் பெ.சண்முகம் உங்களின் பதிவை அதிகபிரசங்கித்தனம் என்று விமர்சித்துள்ளாரே.. அதனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்காமல் பிரவீன் சக்கரவர்த்தி வேகமாக நடந்து சென்றார்.

    English Summary

    Praveen Chakravarty: Praveen Chakravarty Reacts to CPIM’s ‘Overstepping’ Condemation Over Alliance Name Controversy