சென்னை: "தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வை உடனடியாக முதல்வர் திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து ரீல் லைஃபில் சொன்னதை, ரியல் லைஃபில் செய்தால்தான் அவரை மக்கள் ஹீரோவாக பார்ப்பார்கள்" என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று மாலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இந்த அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, "முதலிலேயே நான் தான் அதைப்பற்றி பேசினேன். சட்டசபையிலேயே நான் பேசினேன். ஏனென்றால் அது மாதிரி தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாசம் கூட ஆகவில்லை. எதை பார்த்துவிட்டு இன்றைக்கு ராஜினாமா பண்ணிட்டு போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. அப்போ எதை நோக்கி போறாங்க? அப்ப பணம், பதவி உயர்வை நோக்கித்தான் போறாங்களா என்ற கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் இருக்கு. இதுக்கு பின்னாடி குதிரை பேரம் இருக்கா என்ற கேள்வியும் எல்லாருமே பேசுறாங்க. இப்போ ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு அதிருப்தி ஏற்பட்டு போறாங்கன்னா ஒத்துக்கலாம். அதுதான் நான் சொன்னேன், வச்ச மை கூட காயல. அதுக்குள்ள எதிர்க்க நீங்க ஒரு கட்சியில இருந்து இன்னொரு கட்சிக்கு தாவறீங்கன்னா அப்ப யார்? எல்லாருமே சீனியர் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். இது என்ன உதாரணத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லுது? அப்ப அவங்களுக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு இவங்க எவ்வளவு தூரம் உண்மையா இருக்குறாங்க? நிச்சயமாக தவறு. அப்படி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒரு கட்சிக்கு போறீங்களே, அப்படி இருந்தால் நீங்க அதுக்கு முன்னாடியே எங்களுக்கு மாற்றுக் கட்சியில் நின்னு ஜெயிச்சு போயிருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டும் இல்ல, எல்லா இடத்திலும் மின்வெட்டு. தொடர்ந்து சென்னை முதற்கொண்டு கிராமங்கள் வரைக்கும் எல்லா இடத்திலும் மின்வெட்டு இருக்கிறது. அதனால் மீண்டும் முதல்வர் மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அதேபோல கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்காக நாங்க ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கோம். ஆகஸ்ட் 1 ஆம் தேதி நம்மளுடைய ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போகிறோம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. இதுவரைக்கும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணி திறந்து விடவில்லை. விவசாயிகள் கடன் முழுதாக தள்ளுபடி செய்யவில்லை. இது போன்ற விவசாயிகளுடைய பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளது. எல் நினோ வரப்போகிறது, கடுமையான வறட்சி வரப்போகிறது என்று சொல்கிறார்கள். அப்போ முதலில் பாதிக்கப்படுகிறவர்கள் யார்? விவசாயிகள். அதனால் கண்டிப்பாக முதல்வரும், தமிழக அரசும் முழு கடனையும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யணும். விவசாயிகளைக் காக்கணும். ஏன்னா அவர் சினிமாவில் சொன்னதை ரியல் லைஃபிலும் அவர் நிரூபிச்சாதான் ரியல் ஹீரோவா மக்கள் பார்ப்பாங்க. இல்லை என்றால் வெறும் கண்துடைப்பாக போய்விடும்" எனத் தெரிவித்துள்ளார்.