ரொம்ப எதிர்பார்த்தோம்.. விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் - பிரேமலதா

  • சென்னை: தவெக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை ஏற்கனவே இருந்த திட்டங்கள் தான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.

    Advertisement

    வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும், புதிய தொழிற்சாலைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசு மற்றும் பட்ஜெட் தொடர்பான தனது கருத்துகளில் சில திட்டங்களை வரவேற்ற அதேசமயம், மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா, "பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே இருந்ததும், சில திட்டங்கள் புதிதாகவும் அறிவிச்சிருக்கிறார்கள். வரவு செலவு கணக்கு எல்லாமே அதுல வந்திருக்கு. இன்றைக்கு வாசிக்கப்பட்ட அந்த திட்டங்கள் எல்லாம் சொல்லாக இல்லாமல் செயலாக வடிவு பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களினுடைய கோரிக்கை.

    Advertisement

    தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையான விவசாயிகளுடைய கடன் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது அறிவிக்கப்படவில்லை. அவங்க ஏற்கனவே சொன்னது போல, ஒரு சில கடன் தள்ளுபடிதான் நடந்திருக்கு. முழுமையான கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.

    அதேமாதிரி நான் ஏற்கனவே சொன்னது போல, நீர் மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று, அதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. முதல்ல தமிழ்நாட்டின் நதிகளை இணைக்கிறதுக்கும், நம்மளுடைய தமிழ்நாட்டிலேயே வருகின்ற நீரை எப்படி பாதுகாத்து, அதை வந்து நாம கடலில் வீணாக போய் கலக்காமல் அதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அறிவிப்புகள் இல்லை.

    Advertisement

    அதேமாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திற்கு என்று சில தொழிற்சாலைகளை கண்டிப்பா அறிவிப்பாங்கன்னு நினைச்சேன். ஏனெனில் வேலைவாய்ப்புதான் மிக முக்கியமாக இருக்கு. இளைஞர்களுக்கு எங்கேயுமே வேலை இல்லை, வேலை இல்லைன்னு மக்கள் பேசுறதைதான் நம்ம கேட்க முடிகிறது. எனவே ஒரு ஒரு மாவட்டத்திற்குமான தொழிற்சாலைகள் என்னென்ன மாதிரியான தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று எந்த அறிவிப்பும் இல்லை. வேலைவாயப்புகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.

    10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல வந்து கடன்ல இருக்கு இன்னைக்கு தமிழ்நாடு. பட்ஜெட் அப்படினாலே, ஒரு ஒரு குடும்பத்துல இருந்து தொடங்கும். அந்த பட்ஜெட்டை எப்படி அந்த மாசம் நம்ம வந்து நிர்வகிக்கணும், நமக்கான வரவு என்ன, நமக்கான செலவு என்ன, இதை எப்படி நம்ம சரி செய்யணும், கடன்ல இருந்து எப்படி நம்ம வந்து பட்ஜெட்டை சரி பண்ண முடியும் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு சமையலறையிலும் அஞ்சறைப்பெட்டியில இருந்து தொடங்கக்கூடியதுதான் பட்ஜெட்.

    Advertisement

    அதுதான் இன்னைக்கு ஒரு நாட்டின் பட்ஜெட்டா வருது. அதனால இன்னைக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு இன்னைக்கு கடன்ல இருக்கிறது என்பது வேதனை. இந்த கடன் சுமையை குறைப்பதற்கு என்ன திட்டங்கள் என்பது எதிலும் அறிவிக்கப்படவில்லை. அந்த கடன் சுமையையும் வட்டி சுமையையும் குறைப்பதற்கான அறிவிப்புகள் இல்லை என்பதும் வருந்தத்தக்கது." எனக் கூறியுள்ளார்.

    சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்து கூவம் நதியைச் சீரமைக்கும் திட்டம் மற்றும் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்படும் மின்சார ஏசி பேருந்துகள் போன்ற திட்டங்களை பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

    Advertisement

    மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், மின் கட்டண உயர்வு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    English Summary

    DMDK General Secretary Premalatha Vijayakanth has criticized the TVK government's budget, stating that the announcements made were merely existing schemes. She also expressed disappointment over the absence of an announcement regarding a complete waiver of crop loans in the budget.