சென்னை: பள்ளி மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எந்த முயற்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். "காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளிகளில், மாணவர்களிடம் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தைக் காட்டி பெயர் கேட்பது, புகைப்படம் வைப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்தது கண்டிக்கத்தக்கது" என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளி வகுப்பறையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் முதலமைச்சர் விஜட்யின் புகைப்படத்தை சுவரில் மாட்டி, அதனை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் தனது கட்சி நிர்வாகிகளுடன் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி, எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளியில் உள்ள குடிநீர் வசதி மற்றும் கட்டிடப் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி அவரின் பெயரைக் கேட்பது, மாணவர்கள் விஜய் என்று கூறுவது அதற்கு தவெக நிர்வாகிகள் அவர் எங்களுக்கெல்லாம் அண்ணன் உங்களுக்கு அவர் மாமா என்று கூறுவது மற்றும் பெரும் தலைவர்கள் புகைப்படம் எங்கு உள்ளது அங்கே அவர் புகைப்படத்தை வைக்கப்போகிறோம் என்று கூறி புகைப்படத்தை வைப்பதும் மற்றொரு பள்ளியில் தவெக கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்வதாகச் சென்று அதில் நிர்வாகி ஒருவர் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிருப்தியும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் குழந்தைகளை மூளைச் சலவை செய்து அவர்களை பயன்படுத்தி மாணவர்களையும் திசைதிருப்பி இந்த ஆட்சி வெற்றி பெற்றதாக ஒரு கருத்தும், தகவலும் தமிழகம் முழுவதும் இருக்கிறது. இந்த ஆட்சி வெற்றி பெற்றது அந்த வகையில் என்றால் அதுவே ஒரு தவறான முன்னுதாரண செயலாகும். எனவே பள்ளிகள் என்பது மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான இடமாகும். எந்த அரசியல் கட்சியோ, அமைப்போ, தனிநபரோ மாணவர்களை தங்களது அரசியல் சுய லாபத்திற்காகவும் அல்லது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த கூடாது என்று சட்டத்தில் விதிமுறையும் உள்ளது. எனவே, இந்த சம்பவங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு சென்றுள்ளனவா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. அதேபோல் சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டபோது, மாணவ மாணவிகள் "TVK, TVK" என முழக்கமிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் கல்வி கற்கும் புனிதமான இடங்களாகும். அங்கு அரசியல் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்படுவது கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையையும் மாணவர்களின் சுதந்திரமான கல்விச் சூழலையும் பாதிக்கும் செயலாகும். மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. "மாற்றத்தை தருவோம், மாற்றத்தை தருவோம்" என்று கூறி, இதுபோன்ற மாற்றத்தை யாரும் விரும்பவில்லை. மக்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களையே எதிர்பார்க்கின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.