சென்னை: சட்டமன்றத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள்தான் பேச வேண்டும். ஆனால், எல்லா துறைக்கும் சேர்த்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாதான் பேசுகிறார். பாதி நேரம் அவர்தான் பேசுகிறார் என தேமுதிக சட்டமன்ற குழு தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் பேசியதாவது, "அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள்.. அந்த துறைக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால், எல்லா துறைக்கும் ஒன்றிரண்டு அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். எனவேதான் சட்டமன்றம் இவ்வளவு தூரம் டைவர்ட் ஆகிறது.
உதாரணத்திற்கு.. விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனது துறையை சார்ந்து மட்டும் பேசினால் மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சட்டமன்ற விவாதங்களை வேகமாக முடிக்கலாம். ஆனால், எல்லா பிரச்சனைகள் குறித்தும் ஆதவ் அர்ஜுனா மட்டும்தான் பதில் சொல்கிறார். எதை பற்றி பேசினாலும் அவரே பதில் சொல்கிறார். பாதி நேரம் அவரே பேசுவதால்தான் சப்ஜெட் டைவர்ட் ஆகிறது.. நேரம் அதிகமாக இழுக்கிறது" என்று பேசியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் ஆதவ் அர்ஜுனாதான் பேசுகிறார். மற்ற அமைச்சர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். என்னதான் தவெக அமைச்சர்களில் பலர் புதியவர்களாக இருந்தாலும்.. அவர்கள் எப்போது சட்டமன்ற நடைமுகளை கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்தால்தான்.. தப்போ, சரியோ அவர்கள் பேசி தவறாக இருந்தால் அதை திருத்திக்கொள்வார்கள். எனவே புதியவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று பரவலாக பலரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர். மறுபுறம், புதிய அமைச்சர்களை பேச வைத்தால்.. அவர்கள் சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வார்களோ! என்று தவெக அரசு பயப்படுகிறது. அமைச்சர்களில் பலரும் அரசியல் களத்திற்கே புதியவர்கள். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் அரசியலில் மூத்த தலைவர்கள். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறினால் பார்க்க நல்லா இருக்காது. எனவேதான் புதிய அமைச்சர்களை பெரியதாக பேசவிடாமல் தவெக வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.